பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை- உச்ச நீதிமன்றம்அதிரடி!

jallikattu1

விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மக்களின் இடைவிடாத போராட்டத்தால் தமிழக சட்டசபையில் இதுதொடர்பாகச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது. பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. இதனையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உற்சாகமடைந்தனர்.

jallikattu3

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரசித்தி பெற்ற பாலமேடு, அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை வீரர்கள் அடக்கினர்.

தமிழகம், கர்நாடகா அரசுகள் இயற்றிய சட்டங்களை எதிர்த்து,விலங்குகள் ஆர்வல அமைப்பான, ‘பீட்டா’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஜனவரியில் இந்த வழக்குகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளின் புதிய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

jallikattu73454

இதனிடையே இந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. மிருகவதைக்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும் பீட்டா மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு சட்டதிருத்தம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறும் செயல். மேலும், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள விலங்குகளுக்கான ஐந்து அடிப்படை உரிமைகளை மீறுவதாக தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது. இச்சட்டம் நிறைவேற்றிய பிறகு நடந்த போட்டிகளில் ஐந்து காளைகள், 15 மனிதர்கள் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு சேதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

maxresdefault (2)

கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான, பீட்டா அமைப்பின் மனு தொடர்பாக, நான்கு வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம், நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

 

jallikattu732.jpg.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இறுதி விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரினார். ஆனால், இறுதி விசாரணையை தள்ளி வைக்க மறுத்த நீதிபதிகள் நீங்கள் எதை சொல்வதாக இருந்தாலும், 12ம் தேதி நடக்கும் விசாரணையின்போது சொல்லுங்கள் என்று கூறினர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2018 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது என கூறி பீட்டா அமைப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பொங்கலுக்கு வாடி வாசல் வழியே காளைகள் துள்ளி வருவது உறுதியாகியுள்ளது.

Leave a Response