மதுசூதனனுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்க ஓபிஎஸ் – பழனிசாமி கையெழுத்து: தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு சின்னம் ஒதுக்க பரிந்துரைக்கும் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும்போது, அவர் கட்சி வேட்பாளர் என்பதற்காகவும், சின்னம் ஒதுக்குவது தொடர்பாகவும் படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

இதில், கட்சியில் தலைமை பொறுப்பில் இருக்கும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் கையொப்பமிடலாம். கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் கோரப்பட்டது. இதை தேர்தல் ஆணையம் கடந்த நவ.30-ல் ஏற்றுக் கொண்டது.

 

இது தொடர்பான கடிதத்தை நேற்று முன்தினம், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்தார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி கூறும்போது, “முதல்முறையாக படிவங்களில் கையெழுத்திட ஒரு கட்சிக்கு இருவர் கையெழுத்திடும் நடைமுறை இதுவாகவே இருக்கும்’’ என்றார்.

Leave a Response