கேரளாவில் மீட்கப்பட்ட மீனவர் உடல், நேற்று காலை குமரி கொண்டு வரப்பட்டது. ஓகி புயல் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் நாசத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. குமரியில் இருந்தும் கேரளாவில் இருந்தும், ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 956 மீனவர்கள் மும்பையில் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இவர்களில் 800 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. குமரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் 97 மீனவர்களும், கேரள அரசு தரப்பில் 96 மீனவர்களும் என 193 மீனவர்கள் தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் மீனவர்கள் தரப்பில் இன்னும் 1000த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வரை மீட்கப்பட வேண்டும் என கூறி உள்ளனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டம் ராமன் துறையை சேர்ந்த ெஜர்மியாஸ் என்ற மீனவர் நடுக்கடலில் பலியானார். அவரது உடல் கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடல் பகுதியில் மீட்கப்பட்டு, நேற்று காலைபிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே தெற்காசிய மீனவ கூட்டமைப்பு பொது செயலாளர் சர்ச்சில் நிருபர்களிடம் கூறியதாவது,
குமரி மாவட்டத்தை சேர்ந்த 10 விசைப்படகுகள், 50 நாட்டு படகுகளின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதுவரை 25 மீனவர்கள் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறதுஎன்றார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கூறுகையில், மீனவர்களை தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் வேகம் காட்ட வில்லை. தாமதமாக தேடும் பணி தொடங்கியதால் தான் மீனவர்களை முழுமையாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.