இந்தியாவின் முதன் முறையான திருநங்கைகள் தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது:


இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகள் தினம் ஏப்ரல் 29, 2013 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழா, சென்னையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக அமைச்சர் திருமதி.வளர்மதி, செல்வி.சிவகாமி இ.அ.ப(ஓய்வு), தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், துபாய் தமிழ் சங்கத் தலைவர் செல்வி.ஜெயந்தி, சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த திருநங்கைகள் தின விழாவில், சாதனை புரிந்த இருபது திருநங்கைகளுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவினை “போர்ன் டு வின்” என்னும் அமைப்பை நடத்தும் திருநங்கை ஸ்வேதா முன்னின்று நடத்தினார்.

விழாவில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்கள், சாதனை புரிந்த திருநங்கைகள் மற்றும் இந்த விழாவினை இந்தியாவில் முதன் முறையாக நடத்திய திருநங்கை ஸ்வேதா’வை பாராட்டினர்.