கமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர்த்தாலும் வரவேற்போம்- பா.ஜ.க. மாநில தலைவர்!

 

tamizsai1

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பா.ஜனதா கட்சியின் ஆதிதிராவிடர் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் வழங்கிய நாளான நேற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த அணியின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். தேசிய பொதுச் செயலாளர் சி.என்.ராமு, தேசிய செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சம்பத்ராஜ், படூர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

bjp

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ஜ.க.வை மதவாத கட்சி என கூறுகிறார். சாதியவாதம் பேசும் கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி பா.ஜ.க.வை மதவாதம் என்று கூறுகிறது. தெலுங்கானா மாநிலத்தை உதாரணம் காட்டி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

பல வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க. பிற்படுத்தப்பட்டோருக்காக என்ன செய்தது. ஆட்சி காலத்தில் எதையும் செய்யாமல் மத்திய, மாநில அரசு அதிகாரங்கள் குறித்து தற்போது மட்டும் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர்த்தாலும் பா.ஜ.க. வரவேற்கும்.

Leave a Response