செத்தால்தான் குரல் கொடுப்பீங்களா..? தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்கும் பார்த்திபன்..!

 large_07-1452149050-parthiban45-35288 (1)

ஒரு மனிதன் பிரச்சனையில் இருக்கும்போது தீர்த்து வைக்க முடிகிறதா..? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

எந்த பிரச்சனை இருந்தாலும் சங்கத்துக்கு வாங்க தீர்த்து வைக்கிறோம் என்கிறார்கள்… ஒரு மனிதன் பிரச்சனையில் இருக்கும்போது தீர்த்து வைக்க முடிகிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சனம் செய்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் அத்தை மகனான அசோக்குமார், மதுரையைச் சேர்ந்தவர். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியும், இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 

அசோக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. அவர் ஆட்களை வைத்து மிரட்டுகிறார். மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

அசோக்குமார், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சனம் செய்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், அன்பு நிறைந்த தயாரிப்பாளர்களுக்கு வணக்கம், அன்பு மட்டுமே நம்மை இணைக்கிற ஒரு சக்தியாக இருக்க முடியும். அசோக் குமாரின் மரணம், நம்முடைய சினிமா கனவுக்குள் பெரிய பாறாங்கல்லை இறக்கிவிட்டுப் போயிருக்கிறது. மனம் பிணமாய் கனக்கிறது. அசோக் குமாரைப் போன்று எமோஷனலான, சென்ஸிட்டிவான முடிவெடுக்கக்கூடிய மென்மையான மனிதர்கள் இனி இங்கு ஜீவிக்கவே முடியாது என்பதற்கு இந்த கொலை ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால் இங்கு கந்து வட்டி மட்டுமே ஜீவிக்கும், கேட்டவர்கள் மட்டுமே ஜீவிப்பார்கள்.

 

என் அம்மா தாலியை அடகு வைத்திருக்கவில்லை என்றால் என்னால் படித்திருக்க முடியாது. என்னை மாதிரி நிறைய பேர் அடகுக்கடைகள், வட்டிக் கடைக்காரர்களிடம் அவசர ஆத்திரத்துக்கு பணம் கேட்டு வாங்கி அதில் நிறையப்பேர் வாழ்க்கை மாறியிருக்கிறது. ஆனால், நாம் தப்பானவர்களிடமும், கொடியவர்களிடமும் தான் கடன் வாங்குகிறோம் என்பதை கண்டறிந்து வாங்காமல் இருக்க என்ன செய்வது?

 

வெறும் 20 லட்சம் ரூபாய் கடனுக்காக வளசரவாக்கத்தில் இருந்த 74 லட்சம் மதிப்புள்ள என்னுடைய வீட்டை விற்றுவிட்டு வெளியில் வந்துவிட்டேன், இன்று அதனுடைய மதிப்பு ரூ.7 கோடி. வாங்கிக்கொள்ளலாம்… என்ன இன்னும் சற்று கடுமையாக உழைக்க வேண்டும். சரியான படம் பண்ணினால் நாளைக்கே வாங்கிவிடலாம் என நினைத்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகிவிட்டது. அதாவது அந்த வீட்டை விற்று 13 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக நினைப்பது அதைத்தான்.

எந்தப் பிரச்சினை இருந்தாலும் சங்கத்துக்கு வாங்க தீர்த்து வைக்கிறோம் என்று சொல்கிறோம். ஒரு மனிதன் பிரச்சினையில் இருக்கும்போது தீர்த்து வைக்க முடிகிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும் உதவ யார் முன்வருவார்கள் என்பது தெரியாமல் இருக்கிறது” என்று பார்த்திபன் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

Leave a Response