நில ஆக்கிரமிப்பு புகார்: கேரள அமைச்சர் தாமஸ் சாண்டி பதவி விலகல்!

 Tamil_News_large_1897440

கேரள போக்குவரத்து அமைச்சர் தாமஸ் சாண்டி பதவியை ராஜினாமா செய்தார்.

கேரளாவில் இடதுசாரி கூட்டணி அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனது சொகுதியான ஆழப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியில் நெல் விளையும் விவசாய நிலையத்தை ஆக்கிரமித்து ஆடம்பர விடுதி கட்டியதாக இவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்தார். இதை ரத்து செய்யக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் தாமஸ் சாண்டி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ”ஆட்சியில் இடம் பெற்றுள்ள அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள நீங்கள் அதற்கு பதிலாக பதவியில் இருந்து விலகலாம்” என தாமஸ் சாண்டியை உயர் நீதிமன்றம் கண்டித்தது.

இந்த விவகாரத்தை அடுத்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக வரிந்து கட்டின. இடதுசாரி கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், தாமஸ் சாண்டிக்கு எதிராக குரல் கொடுத்தன. இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் சாண்டி அமைச்சர் பொறுப்பில் இருந்து பதவி விலகியுள்ளார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில தலைவர் பீதாம்பரன் கூறுகையில், ”அமைச்சர் தாமஸ் சாண்டியின் ராஜினமா கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்துள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் முறையிட தாமஸ் சாண்டி முடிவு செய்துள்ளார். அவர் குற்றமற்றவர் என விரைவில் உறுதியாகும்” எனக் கூறினார்.

Leave a Response