காலில் காயத்துடன் சுற்றிய காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை!

yanai

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதியை ஒட்டி உள்ள மலை கிராமங்களில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இடது முழங்கால் அருகே பெரிய வீக்கத்துடன் சுற்றிவந்தது. தகவலறிந்து வனத்துறையினர் ஆனைகட்டி வனப்பகுதிக்கு சென்று யானையை தேடி வந்தனர். ஆனைகட்டி அருகே கொண்டனுர் புதூர் வனப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டையில் யானை இருப்பது தெரியவந்தது. பின்னர், கால்நடை மருத்துவர்கள், காட்டு யானைக்கு நேற்று முன்தினம் சிகிச்சையை தொடர்ந்தனர். இதற்காக, கோவை சாடிவயலிலிருந்து கும்கி யானை பாரி வரவழைக்கபட்டது.

 

இரவு ஆகிவிட்டதால் சிகிச்சையை பாதியில் நிறுத்தினர். பின்னர்,  யானை ஆனைகட்டி கொண்டனூர் வனப்பகுதியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதிக்கு சென்றது. இதனை தொடர்ந்து நேற்று யானைக்கு சிகிச்சை அளிக்க சாடிவயலில் இருந்து மேலும் ஒரு கும்கி யானை சுஜய் கொண்டுவரப்பட்டது. பின்னர், யானைக்கு 2வது நாளாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவ அலுவலர்கள் இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தினர். புதர்களுக்கு அருகில் அரை மயக்கத்தில் நடந்து சென்ற யானை ஒரு இடத்தில் நடக்க முடியாமல் நின்றது.

eleஅங்கேயே நிறுத்தி, வலி நிவாரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினர். ஒரு நீண்ட குச்சியில் ஊசி மற்றும் மருந்துகளை கட்டி முன்னங்காலில் இருந்த கட்டியை கிழித்து அறுவை சிகிச்சை செய்தனர். காயத்திற்கு உரிய மருந்துகளை வைத்தனர். சுமார் 2 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன், பின் யானையின் உடலில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மயக்கம் தெளிந்ததும் யானை மெல்ல மெல்ல வன பகுதிக்குள் சென்றுவிட்டது.அந்த யானையின் நடவடிக்கையை கண்காணிக்க 15 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Response