நியாயவிலை கடையில் சர்க்கரை விலையேற்றம்; மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கண்டனம்!

Jawahirulla_long_21242_11370
நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டிக்கும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:-

தமிழக நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு விற்றுவந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழை, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்த விலையேற்றத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாய விலை கடைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த மாதங்களில் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல தமிழக மக்கள் பெரிதும் பயன்படுத்தும் பச்சை அரிசிக்கு பதிலாக, கோதுமை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் பெரிதும் பயன்படுத்தும் சர்க்கரையின் விலையை அதிகரித்து, பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் விற்பனை செய்யும் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நியாயவிலைக் கடைகளை முற்றிலுமாக நிரந்தரமாக மூடவே மத்திய மாநில அரசுகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈட்டுபட்டு வருகின்றன.

இதுபோன்ற மக்கள் விரோத செயலால் மோடி தலைமையிலான மத்திய அரசும், பாஜகவின் கைப்பாவை அரசான எடப்பாடி அரசும் ஏழை எளிய மக்களுக்கு எதிரான அரசு என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகின்றன.

தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சர்க்கரை விலை உயர்வைத் தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Response