நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’

 

supreme-court_660_121713115954

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான, நடைமுறை ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணங்களை, ஆய்வு செய்யம்படி, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுக்கு, உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக, 2016, ஜூலையில், கன்வில்கர், சந்திரசூட், சந்தான கவுடர், நாகேஸ்வர ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் லுத்ரா, தாக்கல் செய்த மனு:

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு, ‘கொலீஜியம்’ முறையில், நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதை மாற்றி, தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை, மத்திய அரசு கொண்டு வந்தது. இதை, 2015ல், ரத்து செய்த உச்ச நீதிமன்றம், கொலீஜியம் முறையை மீண்டும் அமல்படுத்தியது. அப்போது, தலைமை நீதிபதியின் ஆலோசனையை பெற்று, நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறை ஒப்பந்தம் ஒன்றை, மத்திய அரசு உருவாக்கும் என, தெரிவிக்கப்பட்டது. இதுவரை, நடைமுறை ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, எந்த தகுதியும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. அதனால், நீதிபதிகள் நியமனத்தில், ஆதரவு, பாரபட்சம், வேண்டியவர்களுக்கு முன்னுரிமை, போன்றவை தொடர்கின்றன. நீதிபதிகள் நடைமுறை ஒப்பந்தம் உருவாக்காமல், நான்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டது செல்லாது. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்து மனு மீதான விசாரணை, நீதிபதிகள், ஏ.கே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

விசாரணைக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நான்கு நீதிபதிகள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. எனினும், நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறை ஒப்பந்தத்தை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணங்களை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலுக்கு உத்தரவிடப்படுகிறது. வக்கீல் ஒருவர், தன்னை நீதிபதியாக நியமிக்க உரிமை கோர முடியுமா என்பது பற்றிய விவகாரத்தில், நீதிபதிகளுக்கு உதவி செய்ய, மூத்த வழக்கறிஞர், கே.வி.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்

Leave a Response