அந்நிய செலாவணி மோசடி வழக்கு; தினகரனுக்கு நீதிபதி கண்டனம்!

 

ttv_15202_14498_23508_13583
இங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லே’ வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை ‘டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவுசெய்தனர்.

இந்த வழக்கு நீண்ட காலமாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் படி, இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணக்கு டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது, விசாரணைக்கு முன்பே அமலாக்க துறை கேள்விகளை தரவேண்டும் என தினகரன் கோரியிருந்தார்.

தினகரன் கோரிக்கைக்கு நீதிபதி மலர்மதி கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில், சிவில் நீதிமன்றம் போல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கிரிமினல் நீதிமன்றத்தில் உரிமையில்லை. அதுபோல், அமலாக்க துறையிடம் இந்த கேள்விகளை தான் கேட்க வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர் கேட்கக் கூடாது என்ற நீதிபதி மலர்மதி, வழக்கு விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார். 4 மணிக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு தினகரன் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Leave a Response