இறையாண்மைக்கு எதிரான வழக்கில் சீமான் – அமீர் விடுதலை

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர்மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதந்த் தொடரப்பட்ட வழக்கில், இருவரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, ராமேஸ்வரத்தில் திரைத்துறையினர் நடத்திய இலங்கைத் தமிழருக்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக க்யூ பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்து, அதே ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கில் இருவரையும் கைதுசெய்தனர். இருவரும் ஜாமினில் வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் நிதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது.

IMG-20171024-WA0086_12594

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், குற்றம் சாட்டப்பட்ட சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரும், ”இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக எங்கள்மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து எங்களை விடுவித்து நீதியரசர் வழங்கியுள்ள தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்கது. எங்களை விடுவித்த நீதியரசர் தனது தீர்ப்பில், ”மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராகப் போராடும் உங்களது குரலைத் தடுக்க நினைக்கவில்லை.நீங்கள் பேசியதாகக் கூறப்படும் நாளிலோ, அதன் பின்னரோ உங்கள் பேச்சால் எந்த அசாதாரண நிகழ்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களுக்காகத் தொடர்ந்து இதுபோன்று குரல்கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், நாட்டின் இறையாண்மைக்கோ பாதுகாப்புக்கோ உங்கள் பேச்சு குந்தகம் ஏற்படும் வகையில் இருந்துவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

எங்களைப் போன்று மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் போராடும் அனைவருக்கும் இந்தத் தீர்ப்பு புதிய உத்வேகத்தையும் உறுதியையும் கொடுத்துள்ளது. இது, எங்களைப் போன்றவர்களை இன்னும் ஆக்கபூர்வமாக இயங்கவைக்கும்” என்றனர்.
சீமானுடன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் டோமினிக் ரவி, இயக்குநர் அமீர், கட்சி நிர்வாகிகள் பத்மநாபன், ராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Response