வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஒரே நாளில் 155 பேர் காய்ச்சல் பிரிவில் அனுமதி

Daily_News_2017_6076732873917

வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஒரே நாளில் 155 பேர் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 40 பேருக்கு டெங்கு அறிகுறிகள் தெரியவந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், மக்கள் பீதியடைந்து உள்ளனர். தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 356 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 155 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பிரிவுகள் தொடங்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என 124 பேர் முழுவதுமாக குணமடைந்து நேற்று முன்தினம் அரசு மருத்துவமனைகளில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 155 பேர் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

swine_flu

தற்போதைய நிலவரப்படி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 30 குழந்தைகள் உட்பட 185 பேர், பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 356 பேர் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களில் வாலாஜாவில் 2 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 40 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதால், தீவிர பரிசோதனைகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதோடு, நிலவேம்பு கசாயம் பற்றாக்குறையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது 356 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காய்ச்சல் வேகமாக பரவுவதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Leave a Response