மெர்சல் படத்தின் வசனங்களை நீக்க சொல்வது கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் மிரட்டல் என விஷால் கருத்து.

Vishal_19369

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள  ஜிஎஸ்டி வரி  பற்றிய  வசனத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ’மெர்சல்’ படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும்  ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

 

“மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்!

மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது?

சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது” எனக்கூறியுள்ளார்.

 

அதுமட்டுமின்றி ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும் எனவும், ஜனநாயகத்துக்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Response