ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 வருட சிறைத் தண்டனை! ரயில்வே போலீஸார் எச்சரிக்கை!!

Southern-Railways
தீபாவளி நெருங்கிவிட்டது. பட்டாசுகள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் உறவினர்களுக்கு பட்டாசு வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், ரயில்களில் பட்டாசு உள்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என பொதுமக்களுக்கு ரயில்வே போலீஸார் சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் அறிவுரை வழங்குவதோடு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர்.

அந்த துண்டுப் பிரசுரத்தில் ‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லாதீர், மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன!

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வேளச்சேரி மார்க்கத்தில் பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் நடந்த தீ விபத்தையடுத்து இந்தப் பிரசாரம் தொடங்கப்பட்டதாம்!

‘‘ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் படையினரை ஏமாற்றி, ரயில் பெட்டி வரை பட்டாசுகளை எடுத்துச் சென்றுவிட்டால் அதன்பிறகு பிடிபடாமல் சென்றுவிடலாம் என பயணிகள் நினைக்க வேண்டாம். ரயில் நிலையங்களில் சோதனை செய்வதைத் தவிர, பறக்கும் படையினர், வழியில் எங்கு வேண்டுமானாலும், ரயிலில் ஏறி, உடைமைகளை சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அவர்களது சோதனையில் பட்டாசு இருப்பது கண்டறியப்பட்டாலும், கடும் நடவடிக்கை உறுதி’’ என ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

Leave a Response