டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 20’000 பேருக்கு ஆறு மாதம் ஜெயில்!

Aedes kosu
தமிழகம் முழுவதும் சுற்றுப்புறங்களைப் பராமரிக்காமல் டெங்கு காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருந்த 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு (ஜனவரி முதல் செப்டம்பர் வரை ) 11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்னர் என்று அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை களப்பணிகள் நடைபெற்றன.

களப் பணிகளை ஆய்வு செய்த பிறகு ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ‘‘சுகாதாரத் துறையின் தீவிர சோதனை மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 20,000 பேர், டெங்கு கொசு புழுக்களை உற்பத்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. சென்னையில் மட்டும் சுமார் 2,000 கடைக்காரர்கள் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பழைய பொருள்களைச் சேமித்து வைத்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது சுகாதாரத் துறை மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸுக்கு அவர்கள் இரண்டு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். சுகாதாரத் துறையின் எச்சரிக்கை நோட்டீஸை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
மேலும், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தண்டனை சட்டப்பிரிவில் இடம் உள்ளது.
பொது மக்களுக்கு வேண்டுகோள்: தமிழகத்தில் 2 கோடி வீடுகள், லட்சக்கணக்கான நிறுவனங்கள் இருப்பதால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க உதவ வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்’’ என்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்.

Leave a Response