செயற்கை தட்டுப்பாடு; வீட்டு மனை விற்பனை முடக்கத்தால் வியாபார ரீதியாக ஸ்தம்பித்துள்ளது தொழில்நகரம்!

covai

தமிழகத்தின் மான்செஸ்டரான  கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கட்டுமான பணிகள் ஸ்தம்பித்ததாலும், ரியல் எஸ்டேட், வீட்டு மனை விற்பனை முடங்கியதாலும் கோவை பம்ப்செட் விற்பனை மற்றும் உற்பத்தி 40 சதவீதம் பாதிப்படைந்துள்ளது.  நாட்டில் உற்பத்தியாகும் பம்ப்செட்களில் 65 சதவீதம் கோவையில் உற்பத்தியாகி வந்தது. ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான கோடை சீசனில் தினசரி 30 ஆயிரம் பம்ப்செட்கள் உற்பத்தியாவதும், விற்பனையாவதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு உற்பத்தியும், விற்பனையும் 30 சதவீதம் குறைந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.  பம்ப்செட் கொள்முதல் வெகுவாக குறைந்ததுள்ளது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் போர்வெல் போடும் பணிகள் கோடை சீசனில் தீவிரமாக நடக்கும். 2 ஆண்டுகளாக சரிவர நடைபெறவில்லை.

1489735106

இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் பம்ப்செட் மோட்டார் கொள்முதல் செய்யவில்லை. மேலும் போர்வெல் போடும் பணிகளை யார் மேற்கொண்டாலும்  மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்கிற புதிய சட்ட விதிமுறையால் போர்வெல் போடும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு கட்டுமான பணிகள் கடந்த 9 மாதங்களாக ஸ்தம்பிப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு மனை விற்பனை முடக்கம் ஆகியவை காரணமாக வீடு, தோட்டம், கட்டடங்களுக்கு தேவையான போர்வெல் போடும் பணிகளும் 90 சதவீதம் குறைந்துள்ளது.   மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகும் பம்ப்செட்கள் தமிழகத்தில் உற்பத்தியாகும் பம்ப்செட்களை விட விலை குறைவாக உள்ளது.

 

இந்நிலையில் தமிழகத்தின் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதால், கோவையிலுள்ள பம்ப்செட் உற்பத்தியாளர்களின் தொழில் நிலை நலிவடைந்துள்ளது. மூலப்பொருள்கள் பதுக்கல் , வட மாநில பம்ப்செட்களின் விலை குறைவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பம்ப்செட் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களான சார்மிங், ஒயர், காப்பர், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் உதிரிபாகங்களான காஸ்டிங், பேரிங் ஆகியவை வட மாநில வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் அவ்வப்போது பதுக்கி வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்துகின்றனர். இதனால் கோவையில் உற்பத்தியாகும் பம்ப்செட்களின் விலை வட மாநில பம்ப்செட்களை விட விலை உயர்கிறது என பம்ப்செட்    உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாநில வியாபாரிகளால் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தொழில்நகரமான கோயம்புத்தூர் வியாபார ரீதியாக ஸ்தம்பித்துள்ளது.

Leave a Response