வைகோ தயாரிக்கும் முதல் சினிமா; விஷால் வாழ்த்து!

vaiko
வேலுநாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது!

இந்த நாடகத்தை சினிமாவாக தயாரிக்க முன்வந்திருக்கிறார் வைகோ. வைகோ தயாரிக்கும் முதல் திரைப்படம் இது!

வேலுநாச்சியார் நாடக விழாவில் இது குறித்து விஷால் பேசும் போது,
”வைகோ அவர்கள் வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிப்பதற்காக, தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது என்னை வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்க்க கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்தார். அவர் சொன்னதற்கேற்ப வேலுநாச்சியார் மேடை நாடகத்தை பார்த்தது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது. இந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க போகிற வைகோ அவர்களுக்கு வாழ்த்துகள்!’’ என்றார்.

விழாவில் வைகோ பேசும் போது, ”பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை முதலில் வெற்றி கொண்டவர் வேலுநாச்சியார். நான் ஜான்ஸி ராணியை மதிக்கிறேன். காந்தியத்தை, நானாசாகிப்பை மதிக்கிறேன் அவர்கள் வாழ்வில் சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

ஆனால் அவர்கள் பெற முடியாத வெற்றியை தென்னாட்டு சிவகங்கை அரசி அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்ற வரலாற்றை திருவள்ளுவரின் படத்தை தீட்டிய வேணுகோபால்சர்மா அவர்களின் அருமை திருமகனார் ஸ்ரீகாந்த்சர்மா அவர்கள் ஆறரை ஆண்டுக்கு முன்னால் சந்தித்து பேசியபோது மெய் மறந்து போனேன். இந்த நாட்டிய நாடகத்தில் வேலுநாச்சியாரை உணர்ச்சிகளின் கொந்தளிப்பாக நடிகர் திலகம் நமக்கு எப்படி வீரபாண்டிய கட்டபொம்மனாக காட்சி அளித்தாரோ அதைபோல சகோதரி மணிமேகலை சர்மா வேலுநாச்சியாராகவே இங்கு காட்சி அளித்தார்.

இந்த காவியத்தை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது நிறைவேறப் போகிறது’’ என்றார் வைகோ.

Leave a Response