தமிழகத்தில் திரைப்படங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி., வரியை தவிர்த்து கூடுதலாக கேளிக்கை வரி என்று ஒன்று தமிழக அரசால் சேர்க்கப்பட்டது. இந்த பிரச்சனை சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இருக்கும் வேளையில், திரைத்துறையினருக்கும், தமிழக அரசுக்கும் பல பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியாமல், இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு திரைப்படங்களுக்கான புதிய வரி விகிதத்தை அறிவித்தது. அதன் படி தற்போது இருக்கும் 28% ஜி.எஸ்.டி., வரியினுடன் கூடுதலாக 10% கேளிக்கை வரியாக வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஒருபுறம், விநியோகஸ்தர்கள் ஒருபுறம், தயாரிப்பாளர்கள் ஒருபுறம் என புலம்புவதோடு, இந்த கூடுதல் கேளிக்கை வரியை அரசு திரும்பிபெற வேண்டும் என சங்கங்கள் அரசுடனான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு வருகிறது. நாளை முதல் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த பிரச்சனைகள் அனைத்து சுமுகமாக விரைவில் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் “நெஞ்சில் துணிவிருந்தால்” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டை அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் சென்னையில் கோலாகலமாக நடத்தினார். இந்த இசை வெளியீடுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலையில் வகித்து நடத்தினர். சங்க பொறுப்பில் இருப்பவர்கள் முன்னிலையிலேயே இந்த இசை வெளியீடு நடைபெற்றமையினால் ஒன்று மட்டும் தெரிகிறது இந்த கேளிக்கை வரி பிரச்சனை சுமுகமாக முடிந்துவிடும் என்று!
சரி, இந்த இசை வெளியீடு பற்றி பாப்போம் இப்போது…. இந்த படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த் கதாநாயகன்கலாகவும், மெஹ்ரீன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், சாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சுசீந்திரன் கதை, திரைகதை மற்றும் வசனம் எழுதி இயகியுள்ளார். இப்படத்தின் பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் மதன் கார்கி எழுத, டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் காட்சிகளை ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் கத்திரி போட்டு படத்தொகுப்பு செய்த்துள்ளார். அன்னை பிலிம் பாக்டரி சார்பாக மேனேஜர் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இன்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீடு விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, சக்திவேல், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, இயக்குனர்கள் கண்ணன், எஸ்.ஆர்.பிரபாகர், அமுதேஷ்வர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இசை தகட்டினை நடிகர் கார்த்தி வெளியிட இயக்குனர் சுசீந்திரனின் நண்பர்கள் இருவரும், மேடையில் இருந்த படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பெற்றுகொண்டனர்.
“நெஞ்சில் துணிவிருந்தால்” இசை வெளியீடு ரணகளத்திலும் குதுகலமாக நடைபெற்றது.