தினகரன் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவு!

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

mdu_high_court01_11333

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அக்டோபர் 31-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டுவர உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து செப்டம்பர் 29-க்குள் அனைத்து தரப்பும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்தது. ஆனால் தினகரன் தரப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டது. இதை தேர்தல் ஆணையம் நிராகரித்ததுடன் அக்டோபர் 6-ந் தேதி முதல் விசாரணை தொடங்கும் என அறிவித்தது.

இந்நிலையில் தங்களுக்கு கூடுதல் அவகாசம் தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்தது. அதில் 4 மாத கால அவகாசத்தை தினகரன் தரப்பு கோரியிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் பெஞ்ச் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.

இன்று பிற்பகல் தீர்ப்பளித்த நீதிபதிகள்,. தினகரன் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.

Leave a Response