பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்! இன்று விசாரணைக்கு வருகிறது, 18-எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு.

Madras-High-Court-min

18-எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரது ஆட்சி ஊழல் ஆட்சியாக மாறி விட்டது என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தர விட்டார்.

201709182154464966_1_mla-18._L_styvpf

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டு நீதிபதி துரைசாமி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்துக்கு உடனடியாக தடை விதிக்க மறுத்து விட்டார். அதே நேரத்தில் 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக கூறி இடைத் தேர்தல் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க முடியாது என்பது தினகரன் அணியினருக்கு பாதகமாகவும், தேர்தல் நடத்தக்கூடாது என்கிற அறிவிப்பு சாதகமாகவும் பார்க்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 4-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக புதிய நீதிபதி ரவிச்சந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று(4-ந்தேதி)  இந்த வழக்கை விசாரிக்க உள்ளார். இன்றைய விசாரணையின்போது என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகமாகவே உள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்கப்படுமா? அல்லது சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என்று கூறி ஐகோர்ட்டு கை விரித்து விடுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று பிற்பகலில் பதில் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது எந்த மாதிரியான தீர்ப்புகள் கூறப்பட்டாலும் நிச்சயம் அரசியல் அரங்கில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால் தமிழக அரசியல் களத்தில் அடுத்து நடக்கப் போவது என்ன? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Response