இரட்டை இலை விவகாரம்- டெல்லி சென்ற அமைச்சர்கள்!

twoleaves

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் முதல்வர் பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். சின்னம் தொடர்பான விசாரணையில் தங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தினகரன் கோரிக்கை விடுத்தார்.

eps

இதையடுத்து இரு அணிகளும் தங்கள் தரப்பு கூடுதல் ஆவணங்களை செப்டம்பர் 29-க்குள்(இன்று) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து ஏற்கனவே கட்சி பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கிய தீர்மானம், இரட்டை இலை சின்னத்தை மீட்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவற்றின் நகலை முதல்வர் பழனிச்சாமி அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

jayakumar

அதுதவிர மேலும் கூடுதல் பிரமாணப் பத்திரங்களை முதல்வர் பழனிச்சாமி அணியினர் தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்கின்றனர். அதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், சி.வி.சண்முகம் மற்றும் மைத்ரேயன் எம்.பி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

elect

இரட்டை இலை சின்னத்தை பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் முதல்வர் பழனிச்சாமி அணியினர் அதற்காக தீவிரமாக செயல்படுகின்றனர்.

ஆனால் தினகரன் தரப்பில் இதுவரை எந்தவிதமான கூடுதல் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை நெருங்கிவிட்ட நிலையில், சின்னம் யாருக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும்.

dinakaran78990

தேர்தல் ஆணையம் கேட்ட கூடுதல் ஆவணங்களை முதல்வர் பழனிச்சாமி அணியினர் முறையாக தாக்கல் செய்து தினகரன் அணி சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றால் முதல்வர் அணிக்கே சின்னம் ஒதுக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

Leave a Response