போதையில் கார் ஓட்டிய விவகாரம்; நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் ரத்தாகிறது?!

jai

நடிகர் ஜெய் நள்ளிரவில் நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டு மது போதையில் தனது ஆடி சொகுசுக்காரில் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்றுள்ளார். அடையாறு பாலம் அருகே வரும் போது வேகமாக வந்ததால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி முன்பக்கம் நொறுங்கியது. போலீஸார் விசாரணை நடத்தியதில் நடிகர் ஜெய் மது அருந்தி காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போலீஸார், நடிகர் ஜெய் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

21.09.17-ம் தேதி நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் தனது நண்பர் நடிகர் பிரேம்ஜி (வயது -30) த/பெ கங்கை அமரன் என்பவருடன் தாஜ் ஹோட்டலில் விருந்து முடித்து நடிகர் ஜெய் (வயது-32), (சுப்ரமணியபுரம், நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர்) என்பவர் குடிபோதையில் TN-11-J-0567 என்ற AUDI காரை ஓட்டி வந்து அடையார் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

jey

விபத்தில் அவர் ஓட்டி வந்த கார் சேதமடைந்தது. சம்பவ இடம் வந்த கிண்டி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளிதரன் Breathe Analyser கருவியில் அவரை சோதனை செய்ய காரை ஓட்டிவந்த ஜெய் குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடிகர் ஜெய் மீது அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு குற்ற எண். 485/17 ச/பி 279 இ.த.ச & 185, 3 உ/இ 181, 196, 39 உ/இ 192 மோட்டார் வாகன சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு ஜாமீனில் அனுப்பப்பட்டார்.

மேலும் நடிகர் ஜெய் மீது ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு (13.04.2014 தேதி அதிகாலை 05.10 மணியளவில்) காரை ஓட்டி வந்து காசி தியேட்டர் பாலம் அருகே தடுப்புச் சுவர் மீது மோதியதால் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் குற்ற எண்.286/14 ச/பி 279 இ.த.ச வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response