ஒரு தலைமுறையின் எதிர்காலமே சிதைக்கப்பட்டது! இயக்குநர் பா.இரஞ்சித் உருக்கம்

pa

நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களாலும் நீலம் அறக்கட்டளையாலும் சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சுசீந்திரன், கரு.பழனியப்பன், “உறியடி” விஜயகுமார்,மகிழ்திருமேனி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மோகன் ராஜா, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சீனுராமசாமி, மிஷ்கின், ராஜுமுருகன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கலையரசன், தினேஷ், ஜீவி பிரகாஷ், காளி வெங்கட், லிங்கேஷ், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, தோழர் லெனின், நீதியரசர் அரி பரந்தாமன் உள்ளிட்ட அனைவரும் பங்கு கொண்டு உரையாற்றினார்கள்.

அனைவருமே அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்து விட்டு, மத்திய மாநில அரசுகளை நீட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இறுதியாக பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்:-

“இந்துத்வா ஒழியாத வரை சாதி ஒழியாது.. சாதி ஒழியாத வரை சமூக நீதி நிலைக்காது.. இன்னும் பல அனிதாக்களை நாம் இழக்க நேரடும்.. இந்த சாதிய சமூகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி படித்து வெற்றி பெற்ற ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் இப்போது அனிதா என மெரிட்டில் தேர்வானவர்களே மரணத்திற்கு உள்ளாகிறார்கள்.. இந்த மரணம் ஒரு வித அச்சத்தை தருகிறது.

அனிதாவின் இழப்பை ஒரு தமிழ்குழந்தையின் இழப்பாகவே நாம் பார்க்கவேண்டும், உணர்ச்சிவயப்பட்டு எந்த பலனும் நமக்குக்கிடைக்கப்போவதில்லை.

இந்த அரசு என்னசெய்கிறது முதலில் நம் உணவை சாப்பிடக்கூடாதுன்னு சொன்னார்கள், ரேசன்கார்டை பிடுங்கிவிட்டார்கள், இப்போ நீட் கொண்டுவந்து எளியமக்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

நாம் என்னசெய்யப்போகிறோம்?

பண்பாட்டு ரீதியில் நான் ஒன்றுசேரவேயில்லை, இன்னும் ஒரு ஊரில் கோவில் எதற்க்கு இருக்கிறது? கோவிலுக்கு முன்னால் யார் வசிக்கிறார்கள்? கோயிலுக்கு பின்னால் யார் வசிக்கிறார்கள் கோயில் நிலங்கள் யார்கையில் இருக்கிறது, எதைக்குறித்தும் நாம் தெரிந்துகொள்ளுவதில்லை.

அனிதாவை தலித் குழந்தையாக பார்க்காமல் ஒரு தமிழ்குழந்தையாக பார்க்கவேண்டும். எதர்கெடுத்தாலும் கோட்டாவில் படித்துவந்துவிடுகிறார்கள் என்கிறார்கள் அனிதாவின் மார்க்குகளை பாருங்கள்.

ஒரு தலைமுறையின் எதிர்காலமே சிதைக்கப்பட்டுவிட்டது.

இந்த மரணங்கள் மேலும் நிகழாமல் தடுக்க நீட்டை ஒழித்தே ஆக வேண்டும் நாம் ஒன்றாகவேண்டும் என்று பேசினார்.

நிகழ்சியில் மாணவி அனிதாவின் படத்திற்க்கு மாணவர்கள், பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Response