ஏவுகணைச் சோதனை; வடகொரியாவை எச்சரித்த அமெரிக்க அதிபர்!

TUMP

உலகளாவிய எதிர்ப்பு, ஐ.நா. பொருளாதார தடைகள், சர்வதேச உடன்பாடுகள் என எதையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை படைத்த ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது.

2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி அணுகுண்டை விட பல மடங்கு சக்தி கொண்ட ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. (ஹைட்ரஜன் குண்டு என்றபோதும் அது கணக்கில் அணுகுண்டு சோதனையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது).

இந்த நிலையில், 6-வது முறையாக வடகொரியா நேற்று அணுகுண்டு சோதனை நடத்தியது. இந்த சோதனை, கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையைவிட வலிமை வாய்ந்த சோதனையாக அமைந்தது. இந்த சோதனை, கில்ஜூ கவுண்டியில் நடத்தப்பட்டது. அங்குதான் புங்கியே-ரி அணு ஆயுத சோதனை நடத்துமிடம் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

நேற்று நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்தது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐ.நா. சபையும் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், வடகொரியாவுடன் வணிக உறவுகளை கொண்டுள்ள நாடுகளுடனான அனைத்து விதமான வர்த்தக உறவையும் அமெரிக்கா நிறுத்த பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Response