‘புரியாத புதிர்’ திரைப்பட விமர்சனம்

mahima
ஆர்வக்கோளாறினாலோ, வக்கிர புத்தியாலோ அந்தரங்க சங்கதிகளை போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது போன்றவற்றால் ஏற்படும் விபரீதங்களைச் சொல்லும் சைபர் கிரைம் திரில்லர்!

இயக்கம்: ரஞ்ஜித் ஜெயக்கொடி தயாரிப்பு: ஜேஎஸ்கே JSK Film Corporation

தன் காதலி காயத்ரி துணி மாற்றுவது, குளிப்பது போன்ற வீடியோக்கள் விஜய் சேதுபதியின் மொபைலுக்கு வருகிறது. பதட்டமடையும் அவர், அந்த வீடியோக்களை அனுப்புவது யார்? எங்கிருந்து வீடியோ எடுக்கிறார்கள்? என தேடித் திரிகிறார். ஒரு கட்டத்தில் காயத்ரியுடன் தான் படுக்கையில் சேர்ந்திருக்கும் காட்சியும் வீடியோவாக வருகிறது.

இதையெல்லாம் எடுத்தது யார்? அனுப்பியது யார்? எதற்காக அனுப்பப்பட்டது? இந்த ’புரியாத புதிர்’களுக்கு விடைதான் கதை!

வாட்சப் புழக்கத்துக்கு வரும்முன்பே எடுக்கப்பட்ட படம். வெகுநாள் கழித்து திரைக்கு வந்திருக்கிறது.

விஜய் சேதுபதி சமீபகாலமாக நடிப்பில் வேறொரு பரிமாணத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். ’புரியாத புதிர்’ ஆரம்பகாலத்தில் நடித்த படம். கேரக்டரை உணர்ந்து பக்காவாக செய்திருக்கிறார்!

சின்னதாய் சிரிப்பது, சிரிக்காமல் உம்மென்றிருப்பது இந்த இரண்டு முகபாவங்கள் மட்டுமே காயத்ரிக்கு வருகிறது. அதுவும் எடுபடுவதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம்!

மஹிமா கியூட் கேர்ள். வருகிற காட்சிகள் குறைவு, ஆனாலும் மனதில் நிற்கிறார்!

சைபர் குற்றங்களுக்காக போலீஸை அணுகினால் நிலைமை என்னவாகிறது என்பதை யதார்த்தமாய் காட்சிப்படுத்தியிருப்பது, நடக்கும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்ற சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது, கடைசியில் இருக்கிற ‘அட’ போட வைக்கும் டிவிஸ்ட் திரைக்கதையின் பலம்!

விஜய் சேதுபதியும் காயத்ரியும் இசை ஆர்வம் உள்ளவர்கள். வயலினெல்லாம் வாசிக்கிறார்கள். ஆனால், கதையோட்டத்துக்கு இந்த இசை சமாச்சாரங்கள் வலுசேர்க்கவில்லை.

சமூகத்துக்கு விழிப்புணர்வுச் செய்தி சொல்லும் கதை, விஜய் சேதுபதியின் நல்ல நடிப்பு, குறை சொல்லமுடியாத நடிகர் நடிகைகள் தேர்வு, உறுத்தலற்ற இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் சஸ்பென்ஸைக் கூட்ட வேண்டும் என்பதற்காக ஏதேதோ காட்சிகளைத் திணித்திருப்பது பலவீனம்!

Leave a Response