மத்திய அமைச்சரவையில் அதிமுக இணையுமா ?

tamo
தமிழகத்தில் மிக பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்ப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வத்தின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டதால், பா.ஜனதா கட்சியின் ஆதரவுடன் தனியாக செயல்படத் தொடங்கினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் சிறை சென்றனர். கட்சி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், சசிகலா சிறை செல்லும் முன் துணைப் பொதுச் செயலாளராக தனது அக்காள் மகன் டி.டி.வி தினகரணை பதவியில் அமர்த்திவிட்டு சென்றார்.

அதன்பின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அவர்தலைமையில் கடந்த 4 மாதங்களாக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், டி.டி.வி தினகரன் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் ஓரம் கட்டப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் எடப்பாடிபழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதற்கிடையே தனியாக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம், மீண்டும் அதிமுகவில் இணைந்து, எடப்பாடி பழனிசாமியோடு ஒற்றுமையாகசெயல்படமுடிவு செய்தார்.

இப்போது, அதிமுகவுக்குள் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடிபழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஒருபுறமும் என மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகர் தயாராகி வருகிறார்.

பெட்ரோல் இல்லாமல் நடுகடலில் தத்தளிக்கும் படகாக தடுமாறி வரும் அதிமுக கட்சியை அரவணைக்கும் முயற்சியில் இறங்கிய பா.ஜனதா கட்சியின் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு ஏறக்குறைய வெற்றி கிடைத்து வருகிறது. விரைவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் அதிமுக இணையும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பெயர் வௌியிட விரும்பாத பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நிருபரிடம் கூறுகையில்:-

“அதிமுக கட்சி விரைவில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர இருக்கிறது. அதற்கான நேரம்தான் இன்னும் தெரியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தவுடன் இயல்பாகவே ஆட்சியில் பங்களித்து, அமைச்சரவையில் இடம் பெறும்.

அதிமுகவில் இப்போது, டி.டி.வி தினகரன் தலைமையில் 20 எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டாலும் அது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. இவர்கள் என்னதான் மோதிக்கொண்டாலும், ஆட்சிக்கு எந்த விதமான ஆபத்தும் வரப்போவது இல்லை’’ என்றார்.

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒருபிரிவாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருபிரிவாகவும் செயல்பட்டு வந்தபோது, இருதரப்பையும் இணைக்க பா.ஜனதா கட்சி படு தீவிரம் காட்டி, இணைப்பு பணியில் ஈடுபட்டது. கட்சி உடையும் என்று மக்கள் மனதில் எண்ணங்கள் விதைக்கப்பட்டன.

இதனால், அதிமுக பிளவு படாது, ஒன்றாக இணையும் என்று பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து ஆணித்தரமாக கூறி வந்தது அரசியல் நோக்கர்களுக்கு வியப்பாக இருந்தது. இதற்கு ஏற்றார் போல் பிரதமர் மோடியே தலையிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்தார். இதனால், அதிமுக மெல்ல மெல்ல பா.ஜனதாவின் வளையத்துக்குள் வந்து வௌிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி, அடுத்து மாற்றம் செய்யும் அமைச்சரவையில் அதிமுக கட்சி எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள் என்று தகவல்களும் வௌியானது.

ஆனால், அதற்கு முன்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறும் என்று கூறப்பட்ட நிலையில், அது இப்போது பா.ஜனதா தலைவர் ஒருவரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அடுத்த மாதம் தொடக்கத்தில் மாற்றி அமைக்கும் அமைச்சரவையில் அதிமுக எம்.பி.க்கள் சிலருக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response