பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் ’அல்வா’ வாசு மதுரையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 57. மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் ’அல்வா’ வாசு. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், பின்னர் முழு நேர நடிகராக மாறினார். ரஜினிகாந்துடன் ‘அருணாச்சலம்’, சத்யராஜுடன் ‘அமைதிப்படை’ படங்களில் இவர் நடித்த காட்சிகள் பேசப்பட்டன. வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.
900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அல்வா வாசுவுக்கு கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்னை இருந்தது. இதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டதால் வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு நேற்றிரவு இறந்தார். அவருடைய இறுதி சடங்கு இன்று நடக்கிறது.
மறைந்த அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகளும் உள்ளனர். மேலும் நடிகர் சமூகம் சார்பாக அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.