எது கொலை? எது தற்கொலை? -தினம் ஒரு ஆன்மிகச் செய்தி

KRISHNAN1

பாரதப் போரில் கர்ணனை கொல்வேன் என்று சபதம் பூண்ட அர்ஜுனன் கர்ணனை கொல்லாமல் பாசறைக்குத் திரும்பினான்.

உண்மை அறிந்ததும் அர்ஜுனனைக் கோபமாகத் திட்டினார் தருமர். இவனை நம்பி போரை இழுத்துக் கொண்டோமே என்று நொந்து அர்ஜுனனின் வில்லை பழித்துக் கேலி பேசினார்.

“தன்வில்லை யார்பழித்தாலும் கொல்லுவேன்” என்று சபதம் செய்திருந்த அர்ஜுனன் வில்லை எடுத்துக் கொண்டு தருமரைக் கொலை செய்யத் துணிந்தான். ஆனால் பாசம் தடுத்தது.
“கண்ணா என் சபதப்படி தருமரைக் கொல்ல வேண்டும். ஆனால் அண்ணனைக் கொல்ல மனம் வரவில்லையே, கொல்லவும் வேண்டும், ஆனால் தருமர் சாகவும் கூடாது. என்ன செய்வது என்று அர்ஜுனன் கவலையுற்றான்.

அதற்கு மாயக் கண்ணன் கொல்லாமல் கொல்லலாம். சாகாமல் சாகலாம் தெரியுமா? என்றான்.

தருமர் உன்னைவிடப் பெரியவர். பன்மையில், நீங்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர். அவரை ஒருமையில் நீ என்று அழைத்தால் கொன்றதற்குச் சமம், என்றான் கண்ணன்.
நீங்கள் என்று பன்மையில் அழைக்க வேண்டிய தருமரை நீ என்று ஒருமையில் அழைத்துக் கொல்லாமல் கொன்ற அர்ஜுனன், பெரியோரை அவமதித்த நான் இனி எப்படி உயிர்வாழ முடியும். எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று வாளை உருவித் தற்கொலை செய்து கொள்ளப் போனான். நில் என்று தடுத்த கண்ணன், எப்படி தருமரைக் கொல்லாமல் கொன்றாயோ அப்படி உன்னைச் சாகாமல் சாகடித்துக் கொள் என்று சிரித்தான்.

எப்படி என்றான் அர்ஜுனன். தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது தற்கொலைக்குச் சமம். நீயே உன்னைப் புகழ்ந்து கொள். தற்புகழ்ச்சி தற்கொலையாகி விடும் என்றான்.
பெரியவர்களை அவமதிப்பது ஒருமையில் பேசுவது கொலை. தற்புகழ்ச்சி என்பது தற்கொலை!

தகவல்: திருக்கனூர் வளையல் ராஜா, அகில இந்திய வள்ளலார் மன்ற தலைவர், புதுச்சேரி.

Leave a Response