படகில் பிறந்த பெண் குழந்தை … பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்!

pikair

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு மதுபானி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த ஒரு கிராமத்தில் இருந்து மக்கள் படகின் மூலம் நேற்று மீட்கப்பட்டனர். அதில் கர்ப்பிணி ஒருவரும் இருந்துள்ளார். அவருக்கு திடீரென படகிலேயே பிரசவ வலி ஏற்பட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை படையினரின் மீட்பு படகுகளில் எப்போதுமே அவசர தேவைக்கு மருத்துவ பணியாளர்கள், நர்சுகள் உடன் வருவார்கள். எனவே அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவர்கள் படகிலேயே மறைவாக பிரசவம் பார்த்தனர்.

அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 9-வது பிரிவின் பொறுப்பாளர் விஜய் சின்கா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த ஆண்டும் இதுபோன்று பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டபோது, 4 பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தது நினைவுகொள்ளத்தக்கது.

Leave a Response