போலீஸ் பாதுகாப்புடன் காதலரின் கரம்பிடித்த மணிப்பூர் பெண் போராளி

irom-sharmila-desmond-coutinho-17-1502944447
இரும்பு பெண்மணி இரோம் சர்மிளாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன் காதலனை கரம்பிடித்துள்ளார்.

மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா தற்போது கொடைக்கானலில் தங்கி இருக்கிறார். தனது இளமைக்காலம் முழுவதையும் போராட்டத்தில் கழித்த இரோம் ஷர்மிளா, தேர்தல் கொடுத்த தோல்வியால் மணிப்பூரை விட்டு வெளியேறி கொடைக்கானலில் குடியேறினார். அங்குள்ள அப்சர்வேட்டரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளார்.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தனது காதலர், தேஸ்மாண்ட் ஹட்டின் ஹோவுடன் கொடைக்கானலில் தங்கி இருக்கும் இரோம் ஷர்மிளா, தான் விரைவில் தனது காதலரை திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்தார். கொடைக்கானலில் இருக்கும் மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படுகின்றனர்.

அவர்களின் உரிமைக்காகப் போராடுவேன் எனவும் இரோம் ஷர்மிளா தெரிவித்திருந்தார். தனது திருமணம் தொடர்பாக முன்னரே தகவல் தெரிந்தால், அது பரபரப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் திருமணம் எப்போது நடக்கும் என்பதை ரகசியமாக வைத்திருந்தார் இரோம் ஷர்மிளா.

கடந்த ஜூலை 12ஆம் தேதி இரோம் சர்மிளா தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோவை திருமணம் செய்ய வேண்டி, கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவகத்தில் விண்ணப்பம் அளித்தார். இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என சார் பதிவாளர் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இதனை அடுத்து மறுநாளே கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தார். இந்நிலையில் இதுதொடர்பான ஆதாரங்களை அவர் இன்று சார் பதிவாளரிடம் சமர்ப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரன், கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலாத் தலம் என்றும், இரோம் ஷர்மிளா திருமணம் இங்கு நடைபெற்றால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். இதனால் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

இதனிடையே கொடைக்கானலில் திட்டமிட்டபடி இரோம் ஷர்மிளாவுக்கு இன்று திருமணம் நடைபெறும் என்று அவரது சட்ட ஆலோசகரான அப்துல் ஹமீத் கூறினார். இன்று காலை 10.30 மணிக்கு, தனது காதலரை திருமணம் செய்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரோம் ஷர்மிளா அளித்தார். அதனை சார் பதிவாளர் சரிபார்த்தார். பதிவுத் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் தனது காதலரை கரம் பிடித்தார் இரோம் ஷர்மிளா.

Leave a Response