வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தமிழக அரசு நிதியுதவி!

ranuva

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கண்டனியைச் சேர்ந்த இளையராஜா(25) வீரமரணம் அடைந்தார்.

அவரது உடல் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், அங்கிருந்து வாகனம் மூலம் நேற்று மாலை கண்டனி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. இளையராஜாவின் வீட்டில், கிராம மக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. sகோவை 44-வது பிரிவு ராணுவ அதிகாரி ராகேஷ்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அருகே உள்ள அவரது சொந்த இடத்தில் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இளையராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ரூ.20 லட்சம் நிவாரண நிதி:-

ராணுவ வீரர் இளைய ராஜாவின் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இளையராஜாவின் தாயார் மீனாட்சி, மனைவி செல்வி ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி இந்த நிதியை வழங்கினார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இளையராஜாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Response