மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை உயர் நீதிமன்ற கிளை கெடு விதித்தது?

madurai

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் கடந்த 19.6.2014-ல் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி மதுரை தோப்பூர், தஞ்சாவூர் செங்கிப்பட்டி உள்பட 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு 31.10.2014-ல் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அந்த இடங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்தது. ஆனால் அதன் பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எவ்வளவு நாளாகும்? அதற்கான இடத்தை தேர்வு செய்து அறிவிக்க எவ்வளவு காலம் தேவை? என்பது குறித்த விவரத்தை இன்று பிற்பகலுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி மத்திய அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, டிசம்பர் 31-ம்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்ய 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1-ல் அறிவிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Response