சென்னையில் பரவி வரும் டெங்கு! 75 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி!

dengku

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் 23-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் 5013 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையிலும் தற்போது டெங்கு அறிகுறிகளுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் போலீசார் 4 பேர் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதித்தவர்கள் அதிக பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

அரசு பொது மருத்துவமனையில் 35 பேரும், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 40 பேரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நாராயணபாபு கூறியதாவது:-

சாதாரண காய்ச்சல் 2 நாட்களாக இருந்தாலே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

டெங்கு காய்ச்சல் தீராத வியாதி இல்லை. அதனால் பயப்பட தேவையில்லை. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தால் போதுமானது. தட்டணுக்கள் குறைந்தால் அவற்றை அதிகரிக்க வேண்டும். 4, 5 நாட்களில் குணமாகி வீடு திரும்பலாம்.

ஸ்டான்லி மருத்துவமனை டீன் நமச்சிவாயம் கூறியதாவது:-

காய்ச்சல் தனி வார்டில் 40 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தினமும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.

காய்ச்சல் பாதித்த பெரியவர்களுக்கு தனி வார்டும் குழந்தைகளுக்கு தனி வார்டும் இங்கு உள்ளன. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில் பாதிப்பு குறைவுதான். டாக்டர்கள் 24 மணி நேரமும் இந்த வார்டுகளை கண்காணித்து வருகிறார்கள்.

இதுதவிர மருத்துவமனை வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. நோயாளிகள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இதனை குடிக்கலாம்.

டெங்கு காய்ச்சல் சென்னையிலும் இப்போது அதிகரித்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் பாதித்தவர்களுக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அனைத்து அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள் உஷார்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Response