ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணிர் திறப்பு! பக்தர்கள் மகிழ்ச்சி!

mettur

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.

இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேட்டூர் அணைக்கு கடந்த மாதம் 8 -ந் தேதி முதல் தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7181 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 7048 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து கடந்த சில நாட்களாக குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து வந்தது. நேற்று 35.67 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 36.49 அடியாக உயர்ந்தது.

ஆடிப்பெருக்கு விழா நாளை (3-ந் தேதி) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தண்ணீர் நாளைக்குள் திருச்சிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

aadi-perukku-60

ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்ற ஐதீகத்தால் மேட்டூர், பவானி கூடுதுறை, பரமத்திவேலூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்பட பல பகுதிகளில் காவிரி ஆற்றில் பக்தர்கள் கூடி புனித நீராடுவார்கள்.

அப்போது காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம், சமர்ப்பிப்பர். புதுமண தம்பதிகள் புது மஞ்சள் கயிறு மாற்றி கொள்வதுடன் பழைய திருமண மாலைகளை ஆற்றில் விடுவார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை நாளை அதிகாலை திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடி விட்டு இறைவனை வழிபடுவார்கள்.

அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதானை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் மங்கள காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நாளை மேட்டூர் காவிரி ஆற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிவார்கள். இதில் சேலம் மற்றும் அண்டை மாவட்ட கிராம மக்களும் தங்களது குல தெய்வங்களின் உருவச்சிலைகளை கால்நடையாக தலையில் சுமந்து வந்து காவிரியில் நீராடி செல்வார்கள்.

காவிரியில் நீராட வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேட்டூர் சப்-கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா அரசு சார்பில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு 7 ஆயிரம் கன அடிக்கும் மேல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கலில் நாளை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம்களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response