சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கிய குளம்! அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், சமூக விரோதிகள் எதையும் செய்வார்கள். ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பதெல்லாம் அவர்களுக்கு சாதாரண விஷயம்.

அப்படியான சில அரசியல்வாதிகளிடமும் சமூக விரோதிகளிடமும் சிக்கியுள்ளது திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் வட்டத்துக்குட்பட்ட அடையாளம்பட்டு கிராமத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான குளம் மற்றும் புறம்போக்கு நிலம்.

ஒரு சிலரின் சுயநலத்துக்காக செய்யப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவதென்னவோ பொதுமக்கள்தான்.

அந்த வகையில் தங்கள் பகுதி குளத்தையே ஒரு கும்பல் மடக்கிப் பிடித்துவிட,
ஒரு படத்தில் வடிவேலு ‘கிணத்தைக் காணோம்’ என காமெடியாக புலம்புவாரே, அதேபோல ‘குளத்தைக் காணோம்’ என கண்ணீரோடு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அடையாளம்பட்டு கிராம மக்கள்.

குளத்தை ஆக்கிரமித்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக விரோதிகள் மேற்கண்ட குளத்தை மண் போட்டு மூடி, வீட்டு மனையாக மாற்றி அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி பாண்டுரங்கன் என்பவருக்கு பல கோடிக்கு விற்றுள்ளார்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. ஆக்கிரமிப்பு நிலத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 20 கோடி இருக்கும் என தெரிவிக்கிறார்கள் கிராமத்து மக்கள்!

‘இந்த ஆக்கிரமிப்பை அகற்றி குளமானது பழையபடி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டும்’ என வலியுறுத்தி கடந்த மூன்று வருடங்களாக போராடி வருகிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வகுமார்.

இவர், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு விஷயமாக 30.5.2014 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனுவுக்கு ஆறு மாதங்கள் காலம் தாழ்த்திய பின்னர் தரப்பட்ட தகவலில் இருந்து அந்த நிலம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம்தான் என தெரியவந்துள்ளது.

இந்த மனுவை வைத்துக் கொண்டு 23.01.2015 அன்று அப்போதைய மதுரவாயல் வட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்த செல்வகுமார், ‘அடையாளம்பட்டு கிராமத்துக் குளத்தை சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அதை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழிவகை செய்யவேண்டும்’ என்கிற கோரிக்கையை மனுவாக அளித்துள்ளார்.

தகவல் அறிந்து ஆக்கிரமிப்பு நிலத்தைப் பார்வையிட போயிருந்த நாம், சமூக ஆர்வலர் செல்வகுமாரை சந்தித்துப் பேசினோம்.

‘‘கடந்த இரண்டு வருடங்களாக, ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக மதுரவாயல் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தது… அடுத்தகட்டமாக, மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 30.5. 2017_ல் நடந்த வருவாய்த் தீர்ப்பாயத்தில் (ஜமாபந்தி) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தது போன்ற தனது தொடர் முயற்சி விவரங்களை தேதிவாரியாக ஆதாரத்துடன் காண்பித்தார்.

இத்தனை வருட போராட்டத்தின் பலனாக இப்போதைக்கு அந்த மனிதர் கையில் கத்தை கத்தையாய் மிஞ்சியிருப்பது புகார் மனு கொடுத்த விவரங்கள் மட்டுமே!

‘‘மூணு வருஷ போராட்டங்க. என்னோட முயற்சிக்கெல்லாம் ஒரு பதிலும் இல்லை. ஏற்கெனவே இருந்த வட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், புதுசா மதுரவாயலுக்கு வந்த வட்டாட்சியர்னு எல்லாரையும் நேர்ல பார்த்தும் மனு கொடுத்திருக்கேன். தபால் மூலமாவும் கோரிக்கையை வெச்சுப் பார்த்தாச்சு. என்னதான் முட்டி மோதினாலும் எல்லா முயற்சியும் கிணத்துல போட்ட கல்லு மாதிரிதான்.

இதோ கடந்த 04. 07. 2017 அன்னைக்குகூட மதுரவாயல் வட்டாட்சியரை நேர்ல சந்திச்சு மனு கொடுத்தேன். வருஷம் மூணு ஆச்சுல்ல. இப்போ பார்த்தீங்கன்னா, குளத்தைச் சுத்தி காம்பவுண்ட் சுவர் எழுப்பிட்டாங்க!’’ என வேதனையோடு சொல்கிறார் செல்வகுமார்.

நாம் போயிருந்தபோது, ஆக்கிரமிப்புக்கு உள்ளான அந்த இடத்தில், TASMAC என்று எழுதப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. சில வாகனங்களில் கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் கொடி மாதிரியான டிஸைனில் PR என எழுதப்பட்டிருந்ததையும் பார்த்தோம். அதேபோல் குறிப்பிட்ட அந்த காம்பவுண்ட் சுவரிலும் PR என்ற எழுத்து!

PR என எழுதப்பட்டு அங்கு நின்றிருந்த வாகனங்கள் அனைத்தும் ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு மதுவகைகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள்தான் என்பதையும் உறுதிபடுத்திக் கொண்டோம்.

‘டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்யும் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவாக இந்த இடத்தைப் பயன்படுத்துவது யார்?’ என தெரிந்துகொள்ள அக்கம் பக்கத்தில் விசாரித்தோம்.

அவர்களும் சமூக ஆர்வலர் சொல்வகுமார் சொல்வதுபோலவே, ‘அதிமுக பிரமுகர் பாண்டுரங்கனாகத்தான் இருக்கும்’ என்று நம்மிடம் தெரிவித்தார்கள்.

நாம் பார்த்த வாகனத்தில் றிஸி என்றிருந்ததை வைத்து அது சமூக ஆர்வலர் குறிப்பிட்ட அதிமுக பிரமுகர் பாண்டுரங்கனாகத்தான் இருக்கும் என யூகிக்க முடிந்தது!

மனுவைத் தூக்கிக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் ஆஃபீஸ் என மக்களுக்காக அலைந்துகொண்டிருக்கும் சமூக ஆர்வலர் செல்வகுமாருக்கு மிரட்டல்களும் வருகிறதாம்.

அது பற்றி செல்வகுமாரிடம் விசாரித்தோம்

‘‘அதையேங்க கேட்குறீங்க… நான் ஒவ்வொரு முறை மனு கொடுத்ததும் அந்த மனுக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கைக்கு போய்டுதுனு என்னால உணர முடியுது.
எப்படினா, ஆக்கிரமிப்பாளர்களின் கைக்கூலிகள் என் காதுபடவே, ‘நீ எத்தனை மனு கொடுத்தாலும் எங்க அண்ணனை ஒண்ணும் பண்ண முடியாது’ன்னு மிரட்டுற மாதிரி பேசுவாங்க. அப்படின்னா வருவாய்த் துறையும் இந்த சமூக விரோதிகளுக்கு உடந்தையா இருக்குன்னுதானே அர்த்தம்!

என்ன ஆனாலும் விடமாட்டேங்க. ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, தூர்வாரி ஆழப்படுத்தி குளத்தை பழையபடி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவேங்க!’’ என்கிறார் செல்வகுமார் உறுதியான குரலில்.

மேற்கண்ட விவகாரம் சம்பந்தமாக நாமே மதுரவாயல் தாசில்தார் குமார் என்பவரை கடந்த ஜூலை 14 அன்று அவருடைய கைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு ‘செல்வகுமாரின் புகார் மீது என்ன இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?’ என்று விசாரித்தோம். நம்மிடமும் சம்பந்தப்பட்ட விவரங்களைப் பெற்றுக்கொண்ட தாசில்தார் இரண்டு நாட்களில் நம்மை தொடர்புகொண்டு உரிய பதில் தருவதாக சொன்னார். சொன்னதோடு சரி, தாசில்தார் நம்மை தொடர்புகொள்ள வில்லை.

ஜூலை 26_ம் தேதி மீண்டும் நாம் தாசில்தாரை தொடர்புகொண்டோம். புதிதாய் கேட்பதுபோல் மீண்டும் நம்மிடம் குளம் ஆக்கிரமிப்பு சம்பந்தமான விவரங்களைக் கேட்டுக் கொண்டார். ‘‘விசாரிக்க மறந்துட்டேன். விசாரிச்சுட்டு நானே கூப்பிட்டு சொல்றேன்’’ என்றார்.

தாசில்தாரின் அலட்சியத்தைப் பார்த்தால்,
மேற்கண்ட விவகாரத்தில் அவரும் உடந்தையா? அல்லது ஆளுங்கட்சி விவகாரத்தில் தலையிட பயப்படுகிறாரா? என்பது புரியவில்லை.

அரசாங்கம் இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகிறது?
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

Leave a Response