கமலின் டிவிட்டுகளால் பயன் என்ன?

kamal
கமல்ஹாசன் எதையும் சிந்தித்துப் பேசக்கூடியவர்தான், எதையும் நேர்த்தியாக செய்யக்கூடியவர்தான். ஆனாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் சமீபமாக உலகநாயகன் சற்றே சறுக்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது!

இப்படி ஒரே வரியில் சொன்னால் கமலைச் ‘சார்ந்தோர்’க்கு கோபம் வரலாம். உண்மையை புரிந்து கொண்டால் கோபம் வராது.

கமல் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது இன்று நேற்றல்ல. காலங்காலமாய் நடந்து வருவதுதான். அப்போதெல்லாம் இந்தளவுக்கு விஷுவல் மீடியாக்கள் இல்லை, இப்போது நூற்றுக்கணக்கில் தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. எந்தவொரு செய்தி கசிந்தாலும் அடுத்த நொடியே டிவிட்டர் ஃபேஸ்புக், யூ டியூப் என அந்த தகவல்கள் காட்டுத் தீயாய் பரவி விடுகின்றன!

அப்படித்தான் கமல் டிவிட்டரில் தெரிவிக்கிற கருத்துக்களும் பரவுகின்றன. அவர் தெரிவிக்கிற கருத்துக்களில் இருக்கிற மக்கள் மீதான தார்மீக அக்கறை, சமூகக் கோபம், அந்த கோபத்திலுள்ள நியாயம் இவற்றை மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலுடன் பொருத்திப் பார்க்கிறார்கள். ‘அட நாம சொல்ல நினைச்சதை இந்த மனுஷன் பொட்டுல அடிச்ச மாதிரி சொல்றாம்யா’, ‘அந்தாள் பேசுறது நமக்கான பிரச்னை பத்திதானே?’, ‘நமக்காகத்தானே குரல் கொடுக்கிறார்’ என்றெல்லாம் புரிந்து கொண்டு கமலுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். அவரது கருத்தை தங்களால் முடிந்தவரை பரப்புகிறார்கள். போஸ்டர் அடித்தெல்லாம் ஒட்டுகிறார்கள்!

கமல் தூய தழிழில் தெரிவிக்கிற கருத்துக்கள் புரிந்துகொள்ள முடியாதபடி இருப்பதால் ஒரு தரப்பினர் திருக்குறளுக்கு உரை எழுதுவதுபோல் கமலின் கருத்துக்கு விளக்கம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் பலவும் கமலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. ஒரு தரப்பினர் ஆதரிக்கிறார்கள், இன்னொரு தரப்பு எதிர்க்கிறார்கள். நிலைப்பாடு எதுவானாலும் அவர்கள் இப்போது பேசுவதாகட்டும் அறிக்கை வெளியிடுவதாகட்டும் எல்லாமே கமல் பற்றி என்றாகி விட்டது.
மீடியாக்கள் யூகத்தின் அடிப்படையில், அவரவர் பார்வையில் ‘கமல் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா’ என சிலபல கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான்,
தங்களுக்கு எதிராக கொம்புசீவும் கமலின் செயல்பாட்டை ஆளும்கட்சி மிகச் சாமர்த்தியமாக தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘போலீஸ் தரையில் பாய்ந்தால் திருடன் பாதாளத்தில் பாய்வான்’ என்று சொல்வார்கள் இல்லையா? அதே பாணியைத் தான் ஆளுங்கட்சி கமல் விஷயத்தில் பயன்படுத்துகிறது.
ஆம், கமல் அறிக்கை விடுகிறார். அது வைரல் ஆகிறது.

அப்படி வைரலாகும் அவரது டிவிட்டுக்கு, கருத்துக்கு, அறிக்கைக்கு எதிராக அமைச்சர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கருத்து சொல்கிறார்கள். ‘முடிந்தால் அரசியலுக்கு வந்து பார்’ என்பதுபோல் சவால் விடுகிறார்கள்.

ஆளும் தரப்பிலிருந்து, ‘எங்கள் கட்சியில் சேர்வதாக இருந்தால் வரவேற்போம்’ என்றுகூட சொன்னதாகக்கூட கேள்வி!

கடந்த இரண்டு வாரங்களாக இதே நிலைதான் தொடர்கிறது!
கமல் ஏன் இந்த நேரத்தில் அரசுக்கு எதிராக இந்தளவு கொதிக்க வேண்டும்?

இந்தக் கேள்விக்கு,
‘‘வேறு எதுக்காக? அவர் நடத்துற பிக் பாஸ் பத்தி ஏகப்பட்ட சர்ச்சைகள். தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப் படுத்தினதா சொல்லி ஒரு கூட்டம் பாய்ஞ்சுச்சு. இன்னொரு பக்கம், அந்த நிகழ்ச்சியை கலாசார சீரழிவுனு சொல்லி ரகளை பண்றாங்க. இதுலேருந்தெல்லாம் தன்னையும் தான் நடத்துற நிகழ்ச்சியைக் காப்பாத்திக்க அரசுக்கு எதிரான கருத்தைச் சொல்லி எல்லோரையும் திசை மாத்திக்கிட்டு இருக்கார் கமல். நடிப்புக்கு பேர் போனவராச்சே. சொல்லியா கொடுக்கணும்?’’ என ஒரு தரப்பிலிருந்து பதில் வருகிறது.
அந்த பதில், ‘ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ’ என யோசிக்கவும் வைக்கிறது!

அதெல்லாம் இருக்கட்டும், கமல் விஷயத்தை ஆளும் தரப்பு எப்படி தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டது என்றுதானே கேட்கிறீர்கள்?

அரசுக்கு எதிராக மக்கள் ஏகத்துக்கும் கொதித்துப் போயிருக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எந்த நலத் திட்டங்களையும் செய்யவில்லை என்ற கோபம் எல்லா தரப்பு மக்களிடமும் இருக்கிறது.

நீட் தேர்விலிருந்து தழிழகத்துக்கு விலக்கு அளிக்க உரிய முயற்சியை எடுக்கவில்லை, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை.

குடிநீருக்கும் புழங்கும் நீருக்கும் கடுமையான பஞ்சம், அதை தீர்க்க எந்தவொரு முயற்சியிலும் இறங்கவில்லை. ஆறு, குளம் ஏரிகளைத் தூர் வாருவதில் கவனம் செலுத்தவில்லை.

வர்தா புயலில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து போனது. அதற்கு ஈடாக மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க எந்த முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை.

விவசாயிகள் போராட்டத்துக்கு என்ன தீர்வென்றே புரியவில்லை.

நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் போராடுகிறவர்களுக்கு எந்த பதிலையும் சொல்வதாயில்லை.

அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறைந்ததால் கூட்டமில்லை’ என்பது உட்பட அடுக்கடுக்காய் ஆயிரம் குறைகள் குற்றச் சாட்டுகளை வைக்கிறார்கள் மக்கள்.

அரசாங்கமோ, இது எதையுமே கண்டு கொள்ளாமல், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டத்திலும் டாஸ்மாக்கை எங்கே திறக்கலாம் என்ற ஆராய்ச்சியிலும்தான் ஈடுபடுகிறது’ என குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் கமலின் காரசார அறிக்கைகள் வந்து விழுகிறது. ‘தங்களுக்கு எதிரான அணுகுண்டின் சிறுதுகள் அது. இதை வளரவிட்டால் மக்கள் தங்களுக்கு எதிராக அணு உலையாய் வெடிப்பார்கள்’ என ஆளும்தரப்பு உணர்கிறது.

உடனே கமலுக்கு எதிராக அறிக்கைகள் விடுகிறார்கள் அமைச்சர்கள். அதற்கு கமல் பதில் அறிக்கை விடுகிறார்.

‘திமுகவுடன் கமல் ரகசிய கூட்டணி’ என எங்கிருந்தோ ஒரு செய்தி வருகிறது. அதெல்லாம் இல்லை’ ஓபிஎஸ் சொல்கிறார்.
அறிக்கைப் போர் நடக்கிறது.
ஒரு பக்கம், சர்ச்சைகளைத் தாண்டி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி டிஆர்பியில் உச்சத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஊரெங்கும் பிக் பாஸ் பற்றிய பேச்சாக இருக்கிறது.

கமலுக்கு எதிராக மல்லுக்கட்டுவதன் மூலம் அரசாங்கம் நெடுவாசல், கதிராமங்கலம் பிரச்னைகளில் இருந்து மக்களை அழகாக திசை திருப்பிவிட்டிருக்கிறது. அரசாங்கம் திட்டமிட்டே இதைச் செய்திருக்கிறது.

”தமிழகம் தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு தந்ததாக சொல்லும் சூப்பர் ஸ்டார் உட்பட கலையுலகத்திலேருந்து யாருமே பெருசா மக்கள் பிரச்னை பத்தி பேசறதில்லை, குரல் கொடுக்குறதில்லை. ஆனா, கமல் அப்படி இல்லை. மக்கள் பிரச்னை பத்தி பேச முன்வர்றார். நல்ல விஷயம்தான்…
அதே நேரம், தன்னை வைத்து அரசாங்கம் எப்படியெப்படி காய் நகர்த்துகிறது என்ற விஷயம் புரியாத கமல் அடுத்தடுத்து அரசின் ஊழலுக்கு எதிராக பேசுவதிலேயே தன் நேரத்தைச் செலவிடுவிடுகிறார். அரசாங்கம் இவரை வெச்சு செமையா கேம் ஆடுது’’ என்று சொல்லி வேதனைப் படுகிறார்கள் அரசியல் களத்தை உற்றுக் கவனிக்கும் சிலர்!

அவர்களின் வேதனைக் குரல் உலகநாயகனுக்கு கேட்க வேண்டும். அரசின் ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழத்தான் வேண்டும். ஆனால், அதற்கு முன் நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும் விவசாயிகள் பிரச்னைக்காக டெல்லியிலும் போராடும் மக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதே முக்கியம்.

கமல் உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறார் என்றால் நெடுவாசல், கதிராமங்கலம் பிரச்னைக்கு, விவசாயிகள் போராட்டத்துக்கு என்ன தீர்வு என்பதை அரசிடம் கேட்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, தனக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகிறவர்களுக்கு அட்வைஸ் தருகிறேன் என்ற பெயரில் ‘தரந்தாழாதீர். வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும்’ என ட்விட்டரில் பொங்கிக் கொண்டிருந்தால் எந்தப் பயனுமில்லை என்பதே அரசியலை ஆழ்ந்து பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது!

யானைக்கும் அடி சறுக்கும்தான். கமலுக்கும் அப்படித்தான் சறுக்கியிருக்கிறது. அதுவும் அவருக்கே தெரியாமல் சறுக்கியிருக்கிறது. உலகநாயகன் சுதாரித்துக் கொள்ள வேண்டியது அவசியம் அவசரம்!

Leave a Response