காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் கொண்டாடும் கான்கிரீட் கான்செப்ட்!. ‘மீசைய முறுக்கு’ சினிமா விமர்சனம்!

meesaya-murukku

இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி கதை நாயகனாக, இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் முதல் படம்.

விஜய் ஆண்டனி, ஜிவி. பிரகாஷ் இருவரும் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகே ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்கள். ஆதிக்கு அந்த வாய்ப்பு 10படங்களுக்கு இசையமைப்பதற்குள்ளேயே வந்திருக்கிறது!

ஆதியை தன்னுடைய ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய சுந்தர். சி‘யே இந்தப் படத்தை தயாரித்து ஆதியை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்!

‘வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ எதுவாயிருந்தாலும் மீசைய முறுக்கு!’ இந்த ஒற்றை வாக்கியம்தான் படத்தின் பேஸ்மெண்ட், காலேஜ் ஸ்டூடண்ட்ஸுக்கு உத்வேகம் தரக்கூடிய கான்செப்ட்!

சரணம், பல்லவி என எந்த எந்தவித இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராத பாடல்களை ஆல்பமாக்கும் Independent musicians என்று அழைக்கப்படுகிற கலைஞர்கள் உலகளவில் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பதற்காக போராடும் தமிழ்நாட்டு இளைஞன் ‘ஹிப்ஹாப் ஆதி’யின் சொந்தக் கதை, சோகக் கதை சினிமாவுக்காக அங்கங்கே ‘மானே தேனே பொன்மானே…’ போட்டுக் கொண்டிருக்கிறது.

கல்லூரியில் படிக்கும் ஆதி சீனியர்களால் ராகிங் அவதிகளுக்கு ஆளாகிறார். தொடர்ச்சியாக அவமானங்களைச் சந்திக்கிறார். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் தான் தமிழில் பாடல் எழுதி இசையமைத்துப் பாடுகிற ‘ஹிப்ஹாப் தமிழா’ என்ற ஆல்பத்தை உலகறியச் செய்ய வேண்டும் என படாதபாடு படுகிறார்.

கல்லூரியில் சகமாணவி ஆத்மிகாவுடன் மலர்ந்த காதலையும் தன் லட்சியத்துக்காக விட்டுக் கொடுக்கத் தயாராகிறார். இறுதியில் கிடைத்தது வெற்றியா தோல்வியா என்பதை நேர்த்தியான திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆதி!

மாணவர்களுக்குள் இருக்கும் போட்டி பொறாமை, ராகிங் கலாட்டாக்கள், கல்சுரல் நிகழ்ச்சிகள் என கல்லூரிப் பருவத்தை கச்சிதமான காட்சிகளில் சுமந்து நகர்கிறது படத்தின் முன்பாதி.

படத்தின் தலைப்புக்கேற்ப முறுக்கு மீசை, கடைவாயோரம் தவழவிடும் சிரிப்பு என ஆதி அட்டகாசம். அறிமுக ஹீரோதான் என்றாலும் நடிப்புக்காக நிறைய ‘ஹோம் ஒர்க்’ செய்துள்ளேன் என சொல்லும்படியிருக்கிறது அவரது பெர்ஃபாமென்ஸ்!

கடைந்த வெண்ணெயை உருட்டி மோரில் மிதக்கவிட்டதுபோல் செழுமையாக இருக்கிறார் புதுமுக ஹீரோயின் ஆத்மிகா. சொல்லிக் கொள்ளும்படி நடிக்கவும் செய்திருக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது ஆத்மிகா!

ஆதிக்கு அப்பாவாக, தமிழ் ஆர்வலராக வருகிறார் ஆதி. ‘நமக்கு இப்படி ஒரு அப்பா இருந்தால் வானத்தை வளைத்து விடுவோமே’ என இளைஞர்கள் ஏங்கும்படியான காதாபாத்திரம். மனிதர் அசத்தியிருக்கிறார்.

ஆறு பாடல்கள், ஆறாய்ப் பாயும் ஆர்.ஆர்… ஒரு இசையமைப்பாளராக. தனக்குள் இருக்கிற ‘ஹிப்ஹாப் மியூஸிக்’ வித்தை முழுவதையும் ஒரே படத்தில் இறக்கி வைக்க நினைத்தது போலிருக்கிறது ஆதியின் உழைப்பு!

மாகாபா’வுக்கு தலைகாட்டும் ரோல்தான். பாத்திரம் உணர்ந்து செய்திருக்கிறார்.

நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு தந்திருப்பது, குறிப்பாக ‘யு டியூப்’ மூலம் புகழ் பெற்றவர்களை பயன்படுத்தியிருப்பதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!

அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிகமாய் மீசையை முறுக்குங்கள் ஆதி. இப்போது கொண்டாடுவதைவிட அதிகம் கொண்டாடுவார்கள்!

Leave a Response