ரூபாய் திரை விமர்சனம்:

Rubaai
இயக்குநர் பிரபு சாலமன் தயாரிக்க ‘சாட்டை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அன்பழகன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம்.

கிராமத்தில் வட்டிக்கு பணம் வாங்கி லோடு வேன் ஓட்டி சம்பாதிக்கும் ‘கயல்’ சந்திரனும் அவரது நண்பர் கிஷோரும் ஒரு கட்டத்தில் சென்னைக்கு வருகிறார்கள்.

சின்னி ஜெயந்த், தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்து மகளுடன் இன்னொரு வீட்டுக்கு போவதற்கு வேன் தேடிக் கொண்டிருக்கிறார். அவரிடம் வாடகை பேசி, தங்கள் லோடுவேனில் பொருட்களை ஏற்றிக் கொண்டு போகும்போது ஒரு பெரிய பையில் நிரப்பப்பட்ட கோடிக்கணக்கான ‘ரூபாய்’ நோட்டுகள் இவர்கள் வேனில் வந்து விழுகிறது!

ஏழ்மை நிலையில் உள்ள சந்திரனும் கிஷோரும் அதே நிலையில் உள்ள சின்னி ஜெயந்த்தும் அவரது மகள் ‘கயல்’ ஆனந்தியுமாக சேர்ந்து அந்த பணத்தை வைத்து கார், வீடு என வாங்கி இதுவரை அவர்கள் பார்க்காத சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்!

இப்படியொரு கதையில் தமிழ் சினிமா இலக்கண பண்பாட்டு கலாசார இன்னபிற மரபுப்படி சந்திரனுக்கும் ஆனந்திக்கும் காதல் வந்தாக வேண்டுமே?வருகிறது!

இந்த நிலையில் இவர்கள் கைக்கு வந்தது வங்கிக் கொள்ளையன் ஹரிஷ் உத்தமன் கொள்ளையடித்த பணம் என்பதும் அந்தப் பணம் இவர்கள் வேனுக்கு எப்படி வந்தது என்பதையும் படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் விளக்குகின்றன!

தான் கொள்ளையடித்து தவறவிட்ட பணத்தைத் தேடி, சின்னிஜெயந்த் அன்ட் கோ’வை தேடி வரும் ஹரிஷ் உத்தமன் தன் பணத்தை மொத்தமாக திருப்பித் தரக் கேட்கிறார். குறிப்பிட்ட அந்தப் பணத்தில் பாதிக்கும் மேல் செலவழித்துவிட்ட நிலையில் பணத்தை திருப்பிதர முடியாமல் தவிக்கிறார்கள் இவர்கள்!

‘எனக்குத் தெரியாது, திருடியாவது என் பணத்தைக் கொடுத்தேயாக வேண்டும்’ என துப்பாக்கி முனையில் நிறுத்தி டார்ச்சர் கொடுக்கிறார் ஹரிஷ் உத்தமன்.

மிரட்டலுக்கு அடிபணியும் சந்திரன் அங்குமிங்கும் திருடுகிறார். அதன் மூலம் என்னென்ன விபரீதங்கள் ஏற்படுகிறது என்பதே கிளைமாக்ஸ்!

நூறுக்கும் இருநூறுக்கும் அல்லாடுகிறவர்கள் கையில் கோடிக்கணக்கான ரூபாய் கிடைத்ததும் அவர்களின் மனசு எப்படி மாறுகிறது என்பதை அழகாக விவரித்திருப்பதற்காக இயக்குநர் அன்பழகனுக்கு பாராட்டுகள்!

சந்திரன், ஆனந்தி, ஹரிஷ் உத்தமன் என நடித்துள்ள அத்தனை பேரும் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்!

‘அட நம்ம சின்னி ஜெயந்த்தா இது?’ என ஆச்சரியப்படும்படி குணச்சித்திர வேடத்தில் வருகிறார் சின்னி ஜெயந்த்!குணச்சித்திர வேடம்தான் என்றாலும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கஞ்சமகாபிரபுவாக தன் நகைச்சுவை நடிப்பில், டயலாக் டெலிவரியில் தூள் கிளப்பியிருக்கிறார்! ஏறக்குறைய இன்டர்வல் வரை இவரது ராஜாங்கம்தான்!

சந்திரன் – ஆனந்தி காதலில் பெரிதாய் ஈர்ப்பில்லை. ஆனந்தி படம் முழுக்க ஏதோ உடம்புக்கு முடியாதவர் போன்ற தோற்றத்திலேயே வருவது ஏன் என்றும் தெரியவில்லை

இன்டர்வலுக்கு பிறகு வரும் காட்சிகள் சலிப்பு.

இமான் தன் ஸ்டைலில் உற்சாகமாக புகுந்து விளையாட இந்தக் கதைக்களம் ஏற்றதல்ல என்பதை உணர்ந்து அடக்கி வாசித்திருக்கிறார்!

இரவு நேரக் காட்சிகளில் தெரிகிறது ஒளிப்பதிவின் நேர்த்தி!

‘பணத்தாசை தீங்குகளுக்கு வேர்’ என கருத்து சொல்வதிலேயே குறியாய் இருந்து திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கோட்டைவிட்டதால் ரூபாயின் மதிப்பு சரிந்தேயிருக்கிறது!

Leave a Response