‘ஃபைட் கிளப்’ என்ற ஆங்கிலப் படத்தின் கருவை லேசாகத் தொட்டு வடசென்னையை கதைக்களமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஃபெரோஸ்.
பலங்கொண்ட மனிதர்கள் இரண்டு பேரை மல்யுத்த ஸ்டைலில் சண்டைபோட வைத்து அவர்களில் யார் ஜெயிப்பார்கள் என பணம்கட்டி சூதாடுவதற்குப் பெயர் ‘ஸ்டிரீட் ஃபைட்’ என்கிறது கதை. ரேஸில் எப்படி குதிரையோ இதில் மனிதர்கள்!
சூதாட்டத்துக்குள்ளேயே பெரியதொரு சூதாட்டம் நடத்தி கோடிகளில் பணம் குவிக்கும் தாதாக்கள், அவர்களிடம் பணத்தைத் தொலைக்கும் சோதாக்கள். இவர்களுக்கிடையிலான மோதல் அரசியலில் இருக்கிற நீள அகலங்களை ரத்தம் சொட்டச் சொட்ட காட்சியாக்கியிருப்பதே ‘பண்டிகை’யின் விசேஷம்!?
பெற்றோர் பாசம் சரிவர கிடைக்காமல் சிறுவயதிலிருந்தே ஹாஸ்டலில் வளரும் கிருஷ்ணா அந்த ஹாஸ்டலில் நிலவும் வாழ்க்கைச் சூழலால் முரடனாக உருவாகிறார்.
தன்னுடைய பணத்தேவையைப் பெருக்கிக் கொள்ள மனிதர்கள் மீது பணம் கட்டி சூதாடிக் கொண்டிருக்கும் சரவணனிடம் அதே பணத் தேவையுள்ள கிருஷ்ணா வந்து சிக்குகிறார்.
சரவணனின் மூளை பலம் கிருஷ்ணாவின் உடல்பலம் இரண்டும் அவர்களின் பணத் தேவையை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதே கிளைமாக்ஸ்!
மலையோடு மலைமோதுவது போன்ற வலுவான கேரக்டரில் கிருஷ்ணா. காமாசோமாவென சிரித்துக் கொண்டு விளையாட்டுப் பிள்ளையாய் திரிகிற வழக்கமான பாணியிலிருந்து முழுக்க விலகி ‘ஃபைட்டர்’ மோடுக்கு மனிதர் பக்காவாக டியூன் ஆகியிருக்கிறார்! வெல்டன் கிருஷ்ணா!
கடகடவென வந்து சடசடவென தூறிவிட்டு காணாமல் போகும் மேகம்போல் அப்படி வருகிறார் இப்படி போகிறார் ‘கயல்’ ஆனந்தி. கிருஷ்ணாவுக்கும் இவருக்குமான லவ் ‘கெமிஸ்ட்ரி’யில் ‘பயாலஜி மிஸ்ஸிங்! தலைமுடி அலச வாங்கிப் போன பியரை, குடித்துவிட்டு அலப்பறை செய்வது ரசிக்கும்படி இருக்கிறது!
கிருஷ்ணாவின் உடம்பை துவைத்துக் கிழிக்கும் ஃபைட்டராக சபரீஷ். திரண்ட சதையும் முரட்டுத் தேகமுமாக கேரக்டரில் பொருந்துகிறார்!
தன்னை நாடி வந்த கிருஷ்ணாவிடம் பிரியம் காட்டுவதாகட்டும் பணத்தேவைக்காக ‘ஸ்கெட்ச்’ போட்டு சொதப்பலில் சிக்குவதாகட்டும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் முகத்தை மட்டுமே நடிக்க வைத்து ஸ்கோர் தட்டுகிறார் ‘பருத்திவீரன்’ சித்தப்பு சரவணன்!
படம் முழுக்க மோதல் என்றானபின் அர்.ஆர். அதிரத்தானே வேண்டும்? ஆர்.எச். விக்ரமின் இசையில் அதிர்கிறது. சில இடங்களில் அவர் போட்டிருக்கும் மியூஸிக் எங்கெங்கோ கேட்ட ஃபீலிங்! பாடல்கள் பார்டரில் பாஸாவதோடு சரி!
நிதின் சத்யா கொஞ்சமே கொஞ்சம் தனித்துத் தெரிகிறார்.
மதுசூதனன், அருள்தாஸ் என சுற்றிச் சுற்றி வில்லன்கள். அத்தனை பேரும், கத்தியெடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது போல் சூதாட்டத்தில் சிக்கி சூதாட்டத்தாலேயே அழிகிறார்கள்!
கருணாஸ் தருகிற ட்விஸ்ட் மட்டுமே காமெடி. மற்றபடி பிளாக் பாண்டியின் குறட்டையெல்லாம் காமெடி என நம்பச் சொன்னால் வெரி ஸாரி!
ஒளிப்பதிவின் நேர்த்தியும் அன்பறிவ் & ஸ்டன்னர் ஷாமின் சண்டைப்பயிற்சியும் படத்தின் பலம்!
அல்வாபோல் வந்திருக்க வேண்டிய கதை, ஸ்கிரீன்பிளேயின் தடுமாற்றத்தால்கேசரி பதத்துக்குகூட நெருங்காமல் உப்புமா அளவிலேயே நிற்கிறது.