திரி திரை விமர்சனம்:

Thiri
தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணக் கொள்ளை, அதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் & பெற்றோர்!

இந்த சப்ஜெக்டில் அவ்வப்போது படங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. சமீபத்தில் வந்த ‘இவன் தந்திரன்’ உட்பட!

அந்த வரிசையில் இன்னொரு படம்.

ஆசிரியர் பணியில் இருக்கும் ஜெயப்பிரகாஷ் ஒழுக்கத்தை உயிர் மூச்சாக கொண்டு வாழ்பவர். அப்படியே தன் மாணவர்களும் உருவாக வேண்டும் என நினைக்கிறார்.

தன் மகன் அஸ்வினையும் கண்டிப்புடன், ஒழுக்கமாக வளர்க்கிறார்!

ஆனாலும் அஸ்வின், கல்லூரிப் படிப்பை முடித்து வாங்கும் சர்டிஃபிகேட்டில் BAD (ஒழுக்கமில்லாத மாணவன்) என்று குறிப்பிட்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம்!

அந்தளவுக்கு அஸ்வின் என்ன தப்பு செய்தார், தனக்கு ஏற்பட்ட கெட்டப்பெயரிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதே திரியின் திரைக்கதை!

இயக்கம்: எஸ். அசோக் அமிர்தராஜ்

அஸ்வின், அப்பாவுக்கு அடங்கிய பிள்ளையாக வரும்போது நடிப்பில் சாந்தம், தனக்கு கெட்டபெயர் வந்தபின் நடிப்பில் சீற்றம் என வெரைட்டி காட்டுகிறார். குறை சொல்ல ஏதுமில்லை!

கூழாங்கல்லுக்கு வெண்ணெயில் பாலீஷ் போட்டதுபோல் பளீரென்றிருக்கிறார் ஸ்வாதி! ‘ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் வேண்டும்’ என்பதற்காகவே நம்மை போட்டிருக்கிறார்கள். அதைத்தாண்டி நடிப்பதெல்லாம் தெய்வகுத்தம்’ என்று புரிந்துகொண்ட ஸ்வாதி, அமைதியாக வருகிறார். தெற்றுப்பல் தெரிய சிரிக்கிறார். அவ்வப்போது ஹீரோவைப் பார்த்து ரொமான்ஸ் லுக். அத்தோடு சரி!

கல்லூரி உரிமையாளர் என்றாலே பெரும்பாலும் வில்லன்தான். அந்த வில்லன் அரசியல்வாதியாகவும் இருந்து, அவருக்கு திமிரெடுத்த ஒரு பிள்ளையும் இருந்தால் அக்கிரமத்துக்கு கேட்கவே வேண்டாம். அந்த அக்கிரமத்தை அரங்கேற்றுவது ஏ.எல். அழகப்பன். அலட்டிக்கொள்ளாமல் வில்லத்தனம் செய்ய முயற்சித்திருக்கிறார். அது அவ்வளவாய் எடுபடவில்லை என்பதுதான் சோகம்!

அத்தனை பெரிய வில்லனுக்கு பி.ஏ. நம்ம சென்றாயன்! சீரியஸான இந்தக் கதையில் இவர் கொஞ்சம் சிரிக்கவைப்பார் என்று நினைத்தால் அந்த நினைப்பில் ஜி.எஸ்.டி. பில் அளவுக்கு பெரிதாய் மண்ணள்ளிப் போடுகிறார்!

கருணாகரனை வைத்தாவது கொஞ்சம் கலகலப்பூட்டியிருக்கலாம்!

ஜெயப்பிரகாஷ், சேரன்ராஜ், அனுபமா குமார், டேனியல் இவர்களிடம் பல படங்களில் பார்த்த அதே ஜெராக்ஸ் நடிப்பு!

இந்தக் கதைக்கு ஒரு குத்துப்பாட்டே அவசியமில்லை. இரண்டாவது குத்துப்பாட்டும் வருவது அதிகப்படி!

பழக்கப்பட்ட காட்சிகள், சலிப்பு தரும் திரைக்கதை, 150 நிமிட நீளம்… இதையெல்லாம் தவிர்த்திருந்தால் ‘திரி’ பிரகாசமாக எரிந்திருக்கும்!

Leave a Response