இன்று குடியரசு தலைவர் வேட்பாளர்கள் சென்னை வருகை!

meeraa
இந்தியாவின் 14-வது குடியரசு தலைவருக்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக இன்று (சனிக்கிழமை) சென்னைக்கு வருகின்றனர்.

பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ரஷ்ய கலாசார மையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளார். மேலும், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியிடமும் ஆதரவு கேட்க உள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரும் இன்று சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். மேலும் அவர், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு செல்லவிருக்கும் மீராகுமார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் தவிர புதுவை, கேரளத்தை சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் இருவரும் ஆதரவு திரட்டுகின்றனர். ஒரேநாளில் இருவரும் தமிழகம் வருவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Response