முட்டி போடும் தண்டனை…

neeldown
ஒடிசா மாநிலத்தில், சீருடை அணியாத ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்பெக்டர் கோபம் ஒடிசா மாநிலம், மயூர்பான்ஜி மாவட்டம், பாரிபாடா பகுதியை சேர்ந்த ஊர்காவல் படை இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சேத்தி, கடந்த ஞாயிற்றுகிழமை, ஒரு பெண் உட்பட நான்கு ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டி போடும் தண்டனை அளித்தார். இது தொடர்பான புகைப்படம் நேற்று வெளியானதும் ஒடிசா மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பானது.

நகரத்தின் முக்கிய பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில், இத்தகைய தண்டனை தருவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் சேத்தியிடம் கேட்ட போது, அவர்கள் சீருடை அணிவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். ரத யாத்திரை நிகழ்ச்சி நடந்த போது கூட, காக்கி பேண்ட், சாதாரண சட்டை அணிந்து இருந்தனர். அவர்கள் மூன்று நிமிடங்கள் மட்டுமே முட்டி போட்டனர். அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. எனினும், அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தர விரும்பினேன், என்றார்.

இது குறித்து ஊர்காவல் படை டி.ஜி.பி., பினோய் பெஹீரா கூறுகையில், மயூர்பான்ஜி மாவட்ட எஸ்.பி.,யிடம் இது குறித்து ஒரு அறிக்கை கேட்டுள்ளேன். விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Leave a Response