கோவை கங்கா மருத்துவமனை அறிமுகப்படுத்திய ஏர் ஆம்புலன்ஸ் !..

Air_ambulance_(6)_11079
கோவை கங்கா மருத்துவமனை நேற்றிலிருந்து (25.06.2017) ‘ஏர் (ஹெலிகாப்டர்) ஆம்புலன்ஸ்’ சேவையைத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே பல மாநிலங்களில் ஏர் ஆம்புலன்ஸ் இருந்தாலும் தமிழகத்தில் இதுதான் முதல் ஏர் ஆம்புலன்ஸ் என்றும், ஒரு தனியார் மருத்துவமனை முழுக்க முழுக்க மருத்துவத்தேவைக்காக மட்டும் அவரசகால முதலுதவிகளோடு கூடிய ஏர் ஆம்புலன்ஸ் கொண்டுவந்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்றும் கூறியுள்ளது கங்கா மருத்துவமனை நிர்வாகம்.

ஏர் ஆம்புலன்ஸ் என்றதுமே நம் எல்லோருக்கும் எப்படி நோயாளியின் வீட்டுக்கு அருகில் வந்து இறங்கும் எல்லா இடத்துக்கும் அது சாத்தியமா? எவ்வளவு செலவாகும் என பல்வேறு கேள்விகள் எழும். இதுதொடர்பாக கங்கா ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவரான டாக்டர் காயத்ரியிடம் பேசினோம்;

“எங்கள் முயற்சி மருத்துவத்துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சி. ராணுவத்தில் எல்லாம் இப்படியான ஏர் ஆம்புலன்ஸ்கள் உண்டு. எல்லையில் அடிபட்டு உயிருக்குப் போராடுபவரை தரை வழிப்பயணமாக கொண்டு வந்து காப்பாற்றுவது கடினம். ஆனால், ஏர் ஆம்புலன்ஸ்கள் இருந்தால்தான் அது சாத்தியம். அப்படியான அவசரகால வசதி பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தத் திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். அந்த முயற்சியின் பலனாக இதோ இப்போது அந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

இந்த ஏர் ஆம்புலன்ஸ் கண்ட்ரோல் டீமில் கிட்டதட்ட 20 நபர்கள் இருப்பார்கள். ஏர் ஆம்புலன்ஸ் கேட்டு ஏதாவது ஒரு கால் வந்தவுடன் உடனடியாக அந்தத் தொடர்பை மருத்துவருக்கு இணைப்போம், மருத்துவர் நோயாளியின் நிலையை விசாரித்துவிட்டு, சில மணித்துளிகளில் அந்த நோயாளிக்கு ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பலாமா இல்லை. உடனடியாக நோயாளிக்கு அருகிலேயே இருக்கும் ஏதாவது ஒரு மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தாக வேண்டுமா என்பதை முடிவு செய்வார். இது வீட்டிலிருக்கும் நோயாளிகளுக்கு.

ஒரு மருத்துவமனையில் இருக்கும் நோயாளியை இன்னொரு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டிய சூழலுக்கும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நோயாளிக்கு ஏர் ஆம்புலன்ஸ் தேவை என்றால் உடனடியாக அந்த மாவட்டத்தின் கலெக்டருக்கு பேசி அந்த இடத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதி வாங்குவோம். பாதுகாப்புக்காக அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுப்போம். ஏனென்றால் திடீரென்று ஒரு இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கினால் மக்கள் கூடிவிடுவார்கள் அந்தக் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் உதவி நிச்சயம் தேவை. இந்த நடைமுறைகள் எல்லாம் அடுத்தடுத்த நிமிடங்களில் அரங்கேறும். அதற்கு முழுமையான பயிற்சி கொடுத்து ஏர் ஆம்புலன்ஸ் டீமை உருவாக்கியிருக்கிறோம்.

இந்தச் சேவை எங்கள் மருத்துவமனை நோயாளிகளுக்கு மட்டுமானதல்ல, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அருகாமையில் உள்ள மாநிலங்களின் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு ஏர்போர்ட்டிலிருந்து இன்னொரு ஏர்போர்ட்டுக்கு நோயாளியை அழைத்துச் செல்வதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. வேறு வேறு பகுதியில் இருந்து அழைத்துச் செல்லும் சூழல் ஏற்படும்போது மிகவும் அவசரம் என்றால் அந்தப் பகுதியில் உள்ள ஏதேனும் காலி வளாகத்தில் தரையிறக்கிக்கொள்ளலாம், இப்போதுதான் ஆரம்பிக்கப்போகிறோம். அது நடைமுறைக்கு வரும்போதுதான் அதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து சரி செய்ய முடியும்.

இந்த ஹெலிகாப்டரில் நோயாளிக்குத் தேவையான படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி, பல்ஸ், ரத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தை கண்டறியும் வசதி, வெண்டிலேட்டர், இதயத்துடிப்பை சீராக்கும் கருவிகள் போன்ற அவசர கால வசதிகள் இருக்கின்றன. இது முழுக்க முழுக்க மருத்துவத்தேவைக்காக மட்டுமே. சாதாரண பயணங்கள் இதில் மேற்கொள்ளப்படமாட்டாது. உடலுறுப்புகளை ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படும். இந்த ஹெலிகாப்டர் பத்தே நிமிடத்தில் 100 கிலோமீட்டரை கடக்கும்”

இறுதியாக உங்கள் எல்லோருக்கும் தொக்கி நிற்கும் கடைசி கேள்வியான, கட்டண விபரத்தைக் கேட்டோம். “சாதாரணமாக ஒரு மணிநேரத்து இரண்டு லட்சம் முதல் 2.50 லட்சம் வரை ஆகும். ஆனால், நாங்கள் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கட்டணம் வைத்திருக்கிறோம்” என்றார்.

Leave a Response