யானை தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி செய்ய முதலமைச்சர் உத்தரவு…

muthalvar
இன்றைய கவலைக்கிடமான செய்தி என்றால் கோவை போத்தனூரை அடுத்த கணேசபுரத்தில் காட்டு யானை தாக்கி 4 பேர் உயிர் இழந்ததுதான். அதன் பேரில் தற்பொழுது முதலமைச்சர் அவர்கள் நிதியுதவி வழங்க உள்ளார்.

அதாவது கணேசபுரத்தை சேர்ந்தவர் ஜோசியர் விஜயகுமார். இவரது மகள் காயத்ரி. இருவரும் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டு யானை காயத்ரியை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அப்போது காயத்ரியை காப்பாற்ற முயன்ற விஜயகுமாரை யானை தூக்கி வீசியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து யானையை பிடிக்க வனப்பகுதிக்குள் சென்ற பழனிச்சாமி என்பவரையும் யானை தாக்கியது. அதில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளலூர் பகுதியில் நுழைந்த காட்டு யானை எதிரில் வருவோரை எல்லாம் தாக்கியது. இதில் ஜோதிமணி, நாகரத்தினம் ஆகியோர் யானை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை காடுக்குள் விரட்டியடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கணேசபுரத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாயும்,காயமடைந்த 3 பேருக்கு தலா 59,100 ரூபாயும் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

Leave a Response