திரைப்படமாகும் “சுவாதி கொலை வழக்கு” சர்ச்சையை கிளப்புமா?

Swathi Kolai Vazhaku
சில மாதங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கணினி பொறியாளர் செல்வி.சுவாதி என்பவர் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் ஒரு இளைஞனால் கத்தியால் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலை சம்பவம் நடந்த சில மணி துளிகளிலேயே கொலையாளி சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டார். பின்னர் ராம்குமார் என்பவர் தான் கொலை செய்தார் என காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் ஒருவரை ஆஜர்படுத்தினர். அவர் சிறைசாலையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது சிறைத்துறையினர் கூறினார். இந்த உண்மை சம்பவத்தை இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் தன்னுடைய திரைப்பட குழுவினருடன் இந்த கொலைப்பற்றி விசாரணை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும், காவல்துறையினர் தெரிவித்த அறிக்கைகளையும் கொண்டு “சுவாதி கொலை வழக்கு” என திரைப்படத்திற்கு பெயரிட்டு தற்போது அந்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை ‘ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ்’ சார்பாக எஸ்.கே.சுப்பையா தயாரித்து வருகிறார். இப்படத்தை இயக்கம் எஸ்.டி.ரமேஷ் செல்வன், விஜயகாந்த் நடித்த உளவுத்துறை, அருண்விஜய் நடித்த ஜனனம் மற்றும் வஜ்ரம் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதுமுக நடிகர் ராம்குமாராகவும், இயக்குனர் எ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் கதாபாத்திரத்திலும், பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜோன்ஸ் ஆனந்த் கையாள, மாரி படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஷாம் டி ராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை, வசனத்தை ஆர்.பி.ரவி எழுத, எஸ்.டி.ரமேஷ் செல்வன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். உண்மையில் சொல்லபோனால் சுவாதி கொலையில் மற்றும் ராம்குமார் கைது, ராம்குமார் மரணம் ஆகியவற்றில் பல சந்தேகங்கள் பொது மக்கள் மனதில் இன்றுவரை இருந்து வருகிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தில் எந்த ஒரு கற்பனை காட்சிகளும் சேர்க்காமல், நடந்த சம்பவங்களை படக்குழுவினர் நன்கு விசாரித்து அப்படியே பதிவு செய்துள்ளதாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் மற்றும் கதை வசனகர்தா ஆர்.பி.ரவி ஆகியோர் இன்று சென்னையில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தனர். டீசர் வெளியீடு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எ.சந்திரசேகர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் எஸ்.கதிரேசன், ‘பெப்சி(FEFSI)’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, கவிஞர் சிநேகன், படத்தின் கதாநாயகன் அஜ்மல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளது. இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே அதே கதாபாத்திரங்களின் பெயர்களோடு படமாகப்பட்டுள்ளதால் ஏதாவது சர்ச்சையை யாராவது கிளப்பினாலும் அது இப்படத்திற்கு விளம்பரமாகவே அமையும். விரைவில் வரவிற்கும் இந்த திரைப்படத்தை மக்கள் கண்டிப்பாக அதிக எதிர்பார்போடு தான் இருப்பார்கள், அந்த மக்கள் எதிர்பார்ப்பை எவ்வாறு நிறைவேற்றுவார் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் என்பது படம் வெளிவந்த பிறகு தான் தெரியும். சர்ச்சைக்குரிய ஒரு உண்மை சம்பவத்தை தைரியமாக படமாக்கி வரும் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Response