வெறும் திரைப்படமல்ல! தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடம்!! எய்தவன் திரைவிமர்சனம்…

Yeidhavan Review
நடிகர்கள்: கலையரசன், சட்னா டைட்டஸ், ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கிருஷ்ணன், கவுதம், சரித்தரன், வினோத், ராஜ்குமார் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு – எஸ்.சுதாகரன், இயக்கம் – சக்தி ராஜசேகரன், பாடல்கள் – ந.முத்துக்குமார் மற்றும் கானா வினோத், ஒளிப்பதிவு – சி.பிரேம்குமார், இசை – பார்தவ் பார்கோ, படத்தொகுப்பு – ஐ.ஜெ.ஆலென்.

கதையின் கரு: கல்வி நிறுவனங்களில் சட்டத்துக்கு புறம்பாக மாணவர்களின் குடும்பத்திடமிருந்து நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான பணத்தையும், அங்கு நடக்கும் பண ஏமாற்று வேலைகளையும் சுட்டிக்காட்டும் படம் தான் இந்த “எய்தவன்” படத்தின் கதையின் கரு.

கலையரசன், அவருடைய தந்தை வேலா ராமமூர்த்தி, அவருடைய தாய், தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். கலையரசன் பணம் என்னும் கருவியை விற்கும் தொழில் செய்து வருகிறார். அவருடன் அந்த தொழிலில் அவருடைய நண்பர் ராஜ்குமாரும் ஈடுபட்டு வருகிறார். கலையரசனின் தங்கை தனது 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிக்க விருப்பம் தெரிவிக்கிறாள். அவளுடைய மருத்துவ படிப்புக்கு அனுமதி தேடி கலையரசன் அலைகின்றனர்.

ஒருவழியாக தன்னுடைய தங்கையின் மருத்துவ படிப்புக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு தரகர் மூலமாக ரூ.53 லட்சம் நன்கொடையாக கொடுத்து அந்த கல்லூரியில் தன்னுடைய தங்கைக்கு அனுமது பெறுகிறார் கலையரசன்.

கல்லூரியில் அனுமதி பெற்ற சில நாட்களிலேயே, அந்த கல்லூரிக்கு ‘இந்திய மருத்துவ சங்கத்தின்’ லைசென்ஸ் இல்லை என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக தான் கொடுத்த நன்கொடை பணத்தை திரும்ப தர கேட்டு, கல்வி நிர்வாகத்திடமும், தரகரிடமும் முறையிடுகிறார் கலையரசன். பிரச்சனை முற்றுகிறது, தரகர் தற்கொலை செய்து கொள்கிறார், தங்கை விபத்தில் இறந்து விடுகிறார்.

கலையரசன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘இந்திய மருத்துவ சங்கத்தில்’ கல்லூரி மீது புகார் தெரிவிக்கின்றனர். கலையரசன் தன் தங்கை படிப்பிற்காக கொடுத்த பணத்தை கலையரசன் திரும்ப பெறுகிறாரா, மற்ற மாணவர்கள் படிப்பு என்ன ஆகிறது என்பது தான் படத்தின் மீதமுள்ள கதை.
இன்று இந்தியா முழுவதும் நடைபெறும் கல்வி கொள்ளையின், குறிப்பாக கேபிடேஷன் பீஸ் என்று சொல்லக்கூடிய நன்கொடை எவ்வாறு ஒரு ரசித்து இல்லாமல் கள்ளத்தனமாக பெறப்படுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் கனவுகளும், பெற்றோர்களின் உழைப்பும் எவ்வாறு சின்னா பிணமாகிறது என்பதை பெற்றோர்கள் புரியும் விதத்தில் அருமையாக திரைக்கதை மற்றும் வாசன் அமைத்துள்ளார்கள் இயக்குனர் சக்தி ராஜசேகரன் மற்றும் சதீஷ் சவுந்தர்.

கதையின் நாயகனாக கலையரசன் தன்னுடைய இயற்கையான நடிப்பில் படம் முழுக்க அசத்தியுள்ளார். கதையின் நாயகியாகவும், கலையரசனின் காதலியாகவும், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளராகவும் சட்னா டைட்டஸ் நன்றாக நடித்துள்ளார். கலையரசனின் காதலியாக நச்சென்று ரொமென்ஸ் செய்துள்ளார் சட்னா டைட்டஸ்.

கல்லூரி உரிமையாளரின் மகனாக, வில்லனாக வரும் கவுதம் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பில் அசத்துகிறார். அவருடைய இயற்கையான பார்வை அவருடைய கதாபாத்திரத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். கல்லூரி தரகராக வரும் வினோத் மற்றும் வில்லனின் கையாளாக வரும் வளவன் மற்றும் ‘ஆடுகளம்’ நரேன் தங்களுடைய கதாபாத்திரங்களை அளவோடு கையாண்டுள்ளனர்.

மொத்தத்தில் இந்த ‘எய்தவன்’ வெறும் திரைப்படமல்ல! கல்வி கொள்ளையை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடம்!!

மே 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிற ‘எய்தவன்’, அனைவரும் சென்று பார்க்கவேண்டிய ஒரு திரைப்படம்.

Leave a Response