9 வயதில் பசுமை தூதரான சிறுமி…

pasumai
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம். ஹோசாகரே கிராமத்தை சேர்ந்த வாடகை வீட்டில் வசிக்கும் ரத்தன்குமார் – பவித்ரா தம்பதியினரின் மகள் ஹனி, வயது 9. கடந்த சில நாட்களுக்கு முன்னர், விளையாடி கொண்டிருந்த போது, கடுமையான வெயிலால் அவதிப்பட்டார்.

இதற்கான காரணத்தை தனது தாயாரிடம் கேட்ட போது, மரங்களை வெட்டுவதால் வெயில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறினார். உடனடியாக அந்த சிறுமி, அவர்கள் மரங்களை வெட்டினால் நாம் மரம் நடுவோம் என உடனடியாக பதில் கூறினார்.

பதில் சொன்னதோடு நிற்காமல், உடனடியாக மரக்கன்றை வாங்கி, அதனை நட முயற்சி செய்தார். ஆனால், வாடகை வீட்டில் வசிப்பதால், மரக்கன்று நடுவதில் உள்ள பிரச்னையை அறிந்தார். இதனையடுத்து சொந்த வீடு வைத்திருப்பவர்களிடம் சென்று மரக்கன்று நடுவதன் அவசியத்தை எடுத்து சொல்ல முயற்சி செய்தார்.

மரக்கன்று வாங்குவதற்கு தனக்கு கிடைக்கும் பணத்தை செலவு செய்தார். இது போதவில்லை என்பதால், தனது நண்பர்களிடம் எடுத்துக்கூறி, அவர்களையும் சேர்த்து கொண்டார். தனது நண்பர்களுடன்இணைந்து மரக்கன்றுகளை வாங்கி மக்களிடம் கொடுத்து மரக்கன்று நடுவதன் அவசியம், மரம் வெட்டுவதினால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துக்கூறினர்.

இதற்கு மக்களிடமிருந்து பலவகையான கருத்துகள் வெளிவந்தன. ஒரு சில இடங்களில் மக்கள் மரக்கன்றுகளை நட்டனர். சிலர் இதனை மறுத்து திருப்பி கொடுத்தனர். சிலர் மரக்கன்றுகளை கையில் வாங்கவே யோசித்தனர். இன்னும் சிலர் இது பள்ளி பிராஜக்ட் என நினைத்தனர். இருப்பினும் குழந்தைகள் அனைவரும் வீடு வீடாக சென்று, தாங்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை கொடுத்தனர்.

இதற்கு அவர்களின் பெற்றோர்கள் உதவி செய்தனர். தங்கள் திட்டம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில், அடுத்ததாக, பிளாஸ்டிக் பயன்படுத்தவதை நிறுத்தவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஹனி திட்டமிட்டுள்ளார்.

Leave a Response