மதுரையில் மின்சார கம்பம் சரிந்து விழுந்ததில் ஏழு வயது சிறுமி பலியாகியுள்ளார்.
பலியான சிறுமியின் பெயர் பாண்டீஸ்வரி எனவும், தனது தோழிகளுடன் மின் கம்பத்தின் கீழ் விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. பாண்டீஸ்வரி கருப்பாயூரணி பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த விபத்தில் பாண்டீஸ்வரியுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற சிறுமிகள், நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் சிக்கிய பாண்டீஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மதுரை மாநகராட்சியின் பராமரிப்பு துறையினர் மீது பெயர் குறிப்பிடாமல் தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்காமல், இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள மின் கம்பங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலான மின் கம்பங்கள், மோசமான நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போது மின்கம்பம் சரிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.