உயிர் தப்பிய பயணிகள், தடம்புரண்ட ரயில்!..

karnadakaa
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் (வண்டி எண். 57550) நேற்று நள்ளிரவில் வழக்கம் போல் ஐதராபாத் ரெயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டு கர்நாடக மாநிலம் வழியாக வந்து கொண்டிருந்தது.

இன்று அதிகாலை 3.50 மணி அளவில் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் ஹல்குபூர்-பால்கி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் வந்த போது ரெயிலின் முன்பக்க என்ஜின் உள்பட 4 பெட்டிகள் தொடர்ச்சியாக தடம் புரண்டு கவிழ்ந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகளும், உயர் போலீஸ் அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும், மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது, அவுரங்கபாத் – ஐதராபாத் பயணிகள் ரெயிலுடைய முன்பக்க என்ஜின் மற்றும் அதற்கு அடுத்தப்படியாக இருந்த சரக்கு பெட்டி மற்றும் எஸ்.1, எஸ்.2, எஸ்.3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகள் கவிழ்ந்து இருப்பது தெரியவந்தது.

எஸ்.1, எஸ்.2, எஸ்.3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளில் இருந்த பயணிகள் ரெயில் தடம் புரண்ட சமயத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். முதற்கட்டமாக 2 பயணிகள் மட்டுமே காயம் அடைந்திருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தார்கள்.

இந்த விபத்தை தொடர்ந்து மற்ற ரெயில்கள் அனைத்தும் மறுமார்க்கமாக திருப்பி விடப்பட்டது.

தடம் புரண்ட ரெயிலில் இருந்த பயணிகள் செல்வதற்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர்கள் அனைவரும் மறுமார்க்கமாக வந்த மற்றொரு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்து வந்த மீட்பு குழுவினர் கிரேன் மூலம் கவிழ்ந்த பெட்டிகளை தூக்கி நிலை நிறுத்தி, அதனை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பாதையை கடந்து செல்ல வேண்டிய பல ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென் மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி உமா சங்கர் கூறியதாவது:-

அவுரங்கபாத்-ஐதராபாத் பயணிகள் ரெயில் இன்று அதிகாலை திடீரென தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

உதவிக்காக ஐதாராபாத்- 040-23200865, மற்றும் பார்லி- 02446-223540, விஹாரபாத்- 08416- 252013, பிதார்- 08482- 226329 ஆகிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எனவே பயணிகளின் உறவினர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்த தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு, பயணிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

அவுரங்கபாத்- ஐதராபாத் பயணிகள் ரெயில் தடம் புரண்ட சம்பவம் குறித்து உயர் விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உயர் விசாரணையின் மூலம் ரெயில் என்ஜின் மற்றும் 4 பெட்டிகள் தடம் புரண்டதற்கான முழு காரணங்களும் தெரியவரும்.

Leave a Response